TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ!

TNAயுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது. யுத்த வெற்றி ஒன்றின் மூலம் மகிந்த சகோதரர்கள் சிங்கள மக்களை அந்த வெற்றி மாயையினுள் வைத்துத் தமது ஆட்சிக்காலத்தை அடுத்த தேர்தலிலும் நீடித்துச் செல்லலாம் என்பதைத் தவிர, சிங்கள தேசம் பல்வேறு இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் விவேகமற்ற மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்திய விடுதலைப் புலிகளின் ராஜதந்திரம் அவர்களுக்கு களமுனைத் தோல்வியை ஏற்படுத்தினாலும், அவர்களது இலக்கு மாறாத பயணத்திற்கு ராஜபக்ஷ சகோதரர்களின் மாறாத இனவாத நிலைப்பாடு பெரும் உத்வேகத்தை வழங்கி வருகின்றது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களை அரவணைக்க முற்பட்டிருந்தால்…, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலிகொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தை சிங்கள தேசத்தின் வெற்றியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாடாமல் விட்டிருந்தால்… காலம் தாழ்த்தியாவது தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால்… தமிழீழ விடுதலைப் போராட்டம் தடுமாறித்தான் போயிருக்கும்.

11 செப்ரம்பர் தாக்குதல் ஏற்படுத்தியிருந்த புதிய ஒழுங்கு விதிகள் சிங்கள தேசம்; பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் செல்லினூடாகத் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு உலக நாடுகளின் அமோக ஆதரவைப் பெற்றிருந்தாலும், யுத்த வெற்றிக்குப் பின்னரான மகிந்த சகோதரர்களின் தமிழர்கள் மீதான பழிவாங்கும் செயல்கள் அந்த நாடுகளை மீள் சிந்தனைக்குள்ளாக்கியுள்ளது.

வன்னி மீதான யுத்தத்தை ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை சிங்கள அரசு யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு சுயாதீன ஊடகவியலாளர்களையோ, தொண்டு நிறுவனங்களையோ, மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ தொடர்ந்தும் அனுமதிக்க மறுத்து வருவது, யுத்த கள முனையிலிருந்து தப்பி வந்த தமிழர்களை சிங்கள அரசு நடாத்தும் விதம், இறுதிவரை யுத்த கள முனையில் பணியாற்றிய ஐ.நா.வின் பணியாளர்கள், வைத்தியர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் உட்பட்ட பலரையும் யுத்தம் நடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களின் சாட்சியாகாமல் தடுத்து வைத்திருப்பது, ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு சிறிலங்கா இராணுவத்தினரை விமர்சித்த காரணத்திற்காக 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியது போன்ற சிறிலங்காவின் அத்தனை நடவடிக்கைகளும் அவர்களது தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத கொடூரத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதி யுத்தகாலம் வரை புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் அதிக கவனம் பெறாத போதும், அதற்குப் பின்னரான சிங்கள தேசத்தின் இனவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் போராட்டங்களின் நியாயத் தன்மை பல நாடுகளின் மனச்சாட்சியை உறுத்தி வருகின்றது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான குற்றச் செயல்களினால் பெரும் அதிருப்தியை அடைந்துள்ளன.

சிறிலங்காவிற்கு எதிரான அதன் முதல் தாக்குதலாக சிறிலங்கா இதுவரை அனுபவித்து வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ரத்துச் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. சிறிலங்கா அரசு தமிழர் விரோத செயற்பாடுகளை நிறுத்தி, அவர்களது அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்க தொடர்ந்தும் தவறுமானால், ஐரோப்பிய நாடுகள் மேலும் பல தடைகளை சிறிலங்கா மீது கொண்டு வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான உலகத்தின் அனுதாபங்களைச் சாதகமாக்கிக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் தமது போராட்டங்களை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதில் அந்தத் தேசங்களின் அரசியல் தலைமைகள் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளன. சிங்கள தேசத்தால் ஈழத் தமிழர்கள் மீது போடப்பட்ட பயங்கரவாதத் திரை மெல்ல மெல்ல விலகி வருகின்றது.

விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை விரைவில் தகர்க்கப்படும் சாதக நிலையும் உருவாகியுள்ளது. சிங்கள அரச பயங்கரவாதமே விடுதலைப் புலிகளைப் பிரசவித்தது என்பதை ‘லு மோந்த்’ போன்ற சர்வதேச பிரபல்யமான பத்திரிகைகளே ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளன. முள்ளிவாய்க்கால் வெற்றிக்குப் பின்னர் ‘விடுதலைப் புலிகள்’, ‘பயங்கரவாதம்’ என்ற சிங்கள தேசத்தின் பூச்சாண்டிகள் உலக நாடுகளால் ஏற்கப்படாத நிலை உருவாகியுள்ளது.

ஆக மொத்தத்தில், தமிழீழ மக்கள் இழந்தவற்றை மீட்கும் புறச் சூழல் சாதகமாகவே உள்ளது. புலம் பெயர் தமிழர்கள் தமிழீழ மண்ணை மீட்டெடுக்கவும், தமிழீழ மக்களை சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து விடுவிக்கவுமான தமது போராட்டங்களிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனத் தூய்மையோடு நேர்மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலக நாடுகளின் அக்கினிப் பார்வையிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. இதுவரை கண்டுகொள்ளப்படாமல் விட்டு வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிந்த ராஜபக்ஷ அழைத்துச் சந்தித்ததற்குப் பின்னால் இந்தச் சதி முயற்சி உள்ளதாகவே நம்பப்படுகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களை உலக நாடுகள் சிறிலங்காமீது பிரயோகிக்கும்போது, நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுபற்றிப் பேசுகின்றோம் என்று காலம் கடத்தும் பதிலுக்கு ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த முற்படுகிறார். ராஜபக்ஷ அரசைக் காப்பாற்ற இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகிந்தவுடன் பேசும்படி நிர்ப்பந்தப்படுத்துகின்றது.

இந்த சதிவலையிலிருந்து விடுபட்டு, பேச்சிழக்க வைக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களுக்காக புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழீழத்தை மீட்கும் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் செயலாற்ற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*