TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சீறிலங்காவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இல்லை – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

Mahindaஎதிர்க்கட்சித் தலைவர் என்ற ஒருவர் இன்று அரசாங்கத்துக்கு இல்லையென தெரிவித்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்கு எதிரான அணியின் தலைவராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அடக்குமுறைக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென தெரிவித்திருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி, குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே இன்று சிலர் நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Ma

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே சிறிலங்கா ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “எமது நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென்று சிலர் இன்று தத்தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். எனினும் அரசாங்கமென்ற வகையில் எந்தவொரு ஊடக அடக்குமுறைக்கும் நாம் இடமளிக்கமாட்டோம்.

இதேநேரம், மனித வாழ்க்கையை நாசமாக்குவதற்கு பத்திரிகைத்துறையை பயன்படுத்தக் கூடாது. எனினும் இன்று, சில ஊடக நிறுவனங்கள் மிகவும் வேண்டத்தகாத ஊடக செயற்பாடுகளினால் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

Sri Lanka Electionநாட்டை நேசிக்கும், நாட்டின் கௌரவத்திற்கு மதிப்பளிக்கும் மனிதர்கள் என்ற வகையில் அவர்கள் இது தொடர்பாக புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். இதேநேரம், அரசாங்கம் ஊடகங்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்கும் கொள்கையானது அன்றைபோல் இன்றும் ஒன்றாக மாறாமலேயே இருக்கிறது.

எந்தவொரு சம்பவத்தையும் வெளியிடும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது. எனினும் தமக்குரிய கடமை மற்றும் பொறுப்பு பற்றி புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவர்களுக்கு உரித்தான கடமையாகும். எமது நாட்டின் வெற்றி மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக உலகம் முழுவதும் தகவல்களை கொண்டு செல்வது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்.

இதேவளை, இன்று எம்மில் சிலரே சர்வதேசத்தை எமக்கு எதிராக செயற்பட வைக்கிறார்கள். நான் என்றும் கூறுவது போல் இந்த அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இல்லை. அவர் இந்த நாட்டுக்கே எதிரானவர். எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்கு எதிரான அணியின் தலைவராகியுள்ளார். இது தான் இங்கு வித்தியாசம்.

அவர் நாட்டுக்கு துரோகியாகி விட்டார். தான் பிறந்த தாய் மண்ணுக்கே துரோகியாகிவிட்டார் . எமது படை வீரர்களை சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இவர்கள் தயாராகியிருக்கும் சூழ்நிலையில், தீர்மானமொன்றை எடுக்க உங்களுக்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது.

போர்க் குற்ற அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுவதாக நான் பத்திரிகைகளில் படித்தேன். அரசாங்கத்திற்கு எதிரான பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளிலிருந்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அரச சார்பற்ற நிறுவனத்தினர் சொன்ன தகவல்களிலிருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய சிலரும் வழங்கிய சாட்சியங்களின் மூலமே இது பற்றி பேசப்படுகிறது.

எமக்கென்று பொறுப்பொன்றுள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் நாம் நாட்டு மக்களின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்’ என்று சிறிலங்கா ஜனாதிபதி அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி செய்தி ஆதாரம் – தினக்குரல்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag: ,

Your email address will not be published. Required fields are marked *

*