TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விஸ்வரூபம் ஆதிபகவன் ஓர் ஒப்பீடு…

vis_adhi33 கோடி பெறுமதியான மோதிரம் கைலேஞ்சியுடன் போனது.. திரைப்படத் தயாரிப்பு இரகசியங்கள் தெரிந்தவர்கள்; விஸ்வரூபம் ஆதிபகவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தயாரிப்பு தொழில் நுட்பத்தில் பெரிய வேறுபாடுகள் கொண்ட திரைப்படங்கள் அல்ல என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல கதையை எடுத்துக் கொண்டால் இரண்டுமே ஏறத்தாழ வன்முறையை அடிப்படையாகக் கொண்ட கதைகள்தான்.

கதையில் இருக்கும் ஓட்டைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இரண்டாம் பாகம் என்ற வழிகாட்டலுடன் இரண்டு படங்களுமே முடிவடைகின்றன.

அங்கு கமல் முற்பகுதியில் பெண் தன்மை பொருந்தியவராக வருவார் இங்கு ஜெயம் ரவி பிற்பகுதியில் பெண் தன்மை பொருந்தியவராக வருவார்.

அங்கு கதாநாயகி ஒழுக்கம் குன்றியவராகக் காட்டப்படுவார் இங்கும் ஏறத்தாழ அப்படித்தான்.

விஸ்வரூபம் பகுதி 1, 2 க்கான செலவு மூன்று வருடங்களும் 94 கோடியும் என்கிறார் கமல், ஆதிபகவன் மூன்று வருட உழைப்பும் 33 கோடியும் செலவு என்கிறார்கள்.

இரண்டும் சென்சாரில் பாரிய சிக்கல்களை சந்தித்தவை இரண்டுக்கும் எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன விஸ்வரூபம் வெட்டப்பட்டது காட்சிகள் ஆதிபகவன் பெயரே ஆமீரின் ஆதிபகவன் என்று மாற்றப்பட்டது.

இரண்டும் ஆங்கிலப் படங்களில் இருந்து பல காட்சிகளை திருடிய படங்கள்தான்..

இப்படியிருக்க…

ஏன் விஸ்வரூபம் வெற்றி பெற்றது, ஆதிபகவன் தோற்றது இதுதான் சுவாரஸ்யமான கேள்வி.

மேதைக்கும் பைத்தியக்காரனுக்கும் மயிரிழைதான் வித்தியாசம் என்பார்கள் அதுதான் இங்கும் நடந்துள்ளது.

பொதுவாக 90 வீதமான ரசிகர்கள் திரைப்படம் ஆரம்பித்ததும் அதில் தான் யார் என்று அங்கலாய்த்து நல்லவனான கதாபாத்திரத்துடன் தம்மை ஒட்டிக் கொண்டு, அதனுடன் பயணம் செய்து படம் பார்த்து முடிப்பதே வழமை.

அதுதான் படத்தை விளங்க பலருக்கு சுகமான வழி..

ஆதிபகவனில் ஆதி – பகவன் ஆகிய இரு பாத்திரங்களுமே நெக்கட்டீவ் கரக்டர்களே.. அவர்களில் ஒருவர் இறக்கிறார் மற்றவரின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை..

அதனால் கதாநாயகனுடன் தன்னை ஒட்ட முடியாது சாதாரண ரசிகன் தள்ளாடுகிறான்.

கதாநாயகி நல்லவளாக இருந்தால் அவளோடு பலர் ஒட்டிக் கொள்ளுவார்கள், இங்கு கதாநாயகியும் வில்லியாகி கொல்லப்படுகிறாள்.. ஆக அங்கும் முடியவில்லை.

கதாநாயகி இடைவேளையுடன் வில்லியாகிறாள் அதுதான் பலர் இடைவேளைக்கு பிறகு படம் படுத்துவிட்டது என்கிறார்கள்.

சென்டிமன்ட் இல்லாவிட்டால் தமிழ்ப் படத்திற்கு பெரிய மைனஸ் ஆகிவிடும், இங்கு ஆதியின் தாய் சென்டிமென்டாக வந்தாள் அவளும் என்னவானாளெனத் தெரியவில்லை.

ஆதியின் சகோதரி ஒழுக்கம் கெட்டவனை காதலித்தபோது ஆதி அவளுக்கு முன்னாலேயே அவனைச் சுட்டுக் கொல்கிறான் ஆகவே காதலும் அங்கு கொல்லப்பட்டுவிட்டது.

படம் முடிவில் ரசிகனுக்கு பற்றுக்கோடாக எதுவும் இல்லை.. இதுவே ஆதிபகவன் தோல்விக்குக் காரணம்.

ஆனால் ஆங்கிலத்தில் இதே கதைகள்தான் பெரிய வெற்றி பெறுகின்றன, தமிழில் முடியவில்லை ஏன் அது ஆதிபகவானுக்கே வெளிச்சம்.

மறுபுறம் விஸ்வரூபம் திரைப்படம் பலருக்கு விளங்கவில்லை ஆனால் கமல் கடைசியில் நல்லவனாவதும், கதாநாயகி நல்லவளாவதும் ரசிகனுக்கு நம்பிக்கையுடன் திரையரங்கைவிட்டு வெளியே போக வசதியாக உள்ளது.

ஆகவேதான் கடைசியில் அதனுடன் தன்னை பொருத்திக் கொண்டு விஸ்வரூபத்தை அவன் நல்ல படமாக்குகிறான்.

அதேவேளை அறிவார்ந்த பார்வை பார்த்து திரைப்படத்திற்கு வெளியே நின்று விருப்பு வெறுப்பின்றி நோக்கும் ஐந்து வீதமானவர்களுக்கு விஸ்வரூபத்தைவிட ஆதிபகவன் நல்ல படமாக இருக்க வாய்ப்புண்டு.

கையைத் துடைத்து லேஞ்சியை வீசியபோது விரலில் இருந்த 33 கோடி பெறுமதியான மோதிரத்தையும் உருவி வீசியது போல அமீர் வீசிவிட்டார், ஆனாலும் அவர் பட்டபாடு தவறாது பாராட்டப்பட வேண்டியதே.

பாலாவின் பள்ளியில் இருந்து வந்த அமீர் இப்படி ஒரு படத்தை எடுத்தது தவறு, ஆனால் பாலாவின் பள்ளியில் உள்ளவர்களால் எட்டமுடியாத உயரத்தை அவர் தொட்டு முதல் மாணவனாகியுள்ளார்.

விஸ்வரூபத்தையும் ஆதிபகவானையும் ஒப்பிட்டுக் கொண்டு பார்த்தால் ஆதிபகவன் தரமான படமாகவே காணப்படும்.

மேலும் இந்தப் படத்தை உதவாத படமென்றவர்களின் பார்வையில் உள்ள கோளாறுகளை அறியவும் ஒரு தடவை பார்க்க வேண்டிய படமாகும்.

ஒரு பார்வை 26.02.2013

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*