TamilSpy

பொழுது போக்கு இணையம்…

திசநாயகத்திற்கு 20 வருடமானால் போர்க் குற்றவாளிகளுக்கு எத்தனை வருடம்?

rajaஜனநாயகம் என்பது என்ன? மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் ஆட்சியை / அரசை, ஜன+நாயகம் எனக் கூறுவார்கள். இந்தவகையில், பல மேற்கு நாடுகளில் ஜனநாயகம் முறையிலான ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு நல்ல உதாரணமாக சுவிற்சர்லாந்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அங்கு தவணை முறையில் பாராளுமன்றம், மாநகர சபைகள், ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்று, அதற்குரிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருந்தாலும், மக்களுடன் சம்பந்தப்பட்ட விசேட விடயங்கள் பாராளுமன்றத்திலோ அல்லது மாநகர சபையில் எதிர்கொள்ளும் வேளையில் மக்களின் தீர்ப்பு / முடிவு மக்களிடமிருந்து வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்படுகின்றது.

பெரிய ஜனநாயகம்

நிற்க, உலகில் ஜனநாயகமற்ற நாடுகள் என்ற ரீதியில் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் முன்னணியில் உள்ளது. இவற்றுக்கு அடுத்து தென் அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகள் அடுத்தபடியாக உள்ளன. ஆனால் உலகில் பெரிய ஜனநாயகம் என்று கூறப்படும் ‘இந்தியா’ ஆசியாவிலே உள்ளது.

முதலில் பெரிய, ‘பெரிய ஜனநாயகம்’ என்பது என்ன? இது அந்நாட்டின் சனத்தொகையை அடிப்படையாகக்கொண்டும், தேர்தல்கள் அங்கு தவணைமுறையில் நடைபெறுவதையே குறிப்பிடப்படுகின்றது. இதற்கு மேல் இந்தியாவின் ஜனநாயகத்தை நாம் யாவரும் நன்கு அறிவோம்! இதையடுத்து, சிறீலங்காவில் திரு. மங்கள சமரவீரா வெளிநாட்டு அமைச்சு பதவியை 2005ம் ஆண்டு ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், சிறீலங்கா ஓர் புதிய அரசியற் பதத்தை பாவனைக்கு உட்படுத்தியுள்ளது.

அது என்னவெனில், சிறீலங்கா ஓர் ‘பழைய ஜனநாயகமாம்’ இதை எந்த அடிப்படையில் இவர்கள் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சிறீலங்காவில் எந்த அடிப்படையில், எவ்வேளையில் ஜனநாயகம் நிலவுகிறது? தமிழ் மக்கள் தாம் ஓர் ‘தேசிய இனம் என பல்விதங்களில் நிரூபித்த பின்னரும் இவர்கள் சிறீலங்காவின் ஓர் சிறுபான்மையினர்’ எனக் கூறி வந்த சிறீலங்கா அரசுகள் தற்பொழுது ‘சிறுபான்மை’ இனம் என்ற ஒன்றே அங்கு இல்லையென வெளிப்படையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள்! இது சர்வதேச மனித உரிமை மரபுகள் கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறான மட்டுமல்லாது இது ஜனநாயகமுமல்ல.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள், பரம்பரையாக, சகாப்தங்களாக, தமது அடிப்படை உரிமைகள் சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களத் தலைவர்கள் மறுத்து வருவதை சர்வதேச ரீதியாக அறைகூவி வருகின்றனர். ஆனால் சிறீலங்கா அரசுகள், ‘செவிடன் காதில் ஊதிய சங்குபோல்’ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மறுப்பது மட்டுமல்லாது, தமிழ் மக்களை இவர்களது தாயக பூமியான வடக்கு, கிழக்கிலிருந்து ‘இனச் சுத்திகரிப்பும்’ செய்கின்றனர்.

இன்றைய நிலை

இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலிருந்து இன்றுவரை பல சிங்கள அரசியல் கட்சிகளும், சிங்கள தலைவர்களும் இத்தீவில் ஆட்சிசெய்தபொழுது, இங்கு தமிழ் மக்களின் நிலைமை படிப்படியாக மிக மோசமடைந்துள்ளது. இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பொறுப்பெடுத்து, அதைத் தொடர்ந்து ஜனாதிபதியாக கடந்த ஐந்து வருடத்துக்கு மேலாக கடமை புரிகிறார்.

இவரது காலப்பகுதியில் மட்டும் ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்டதுடன், ஏறக்குறைய முப்பதினாயிரம் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் காணாமல் போயுள்ளதுடன், நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், இவர்களது வாழ்விடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமய ஸ்தலங்களில் அறுபது வீதமானவை அழித்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன! இதுதான் சிறீலங்காவில் நிலவும் ஜனநாயகமா?

Was2548013

தமிழ் மக்களின் பெயரை சர்வதேச ரீதியாக விற்கு முதலைக் கண்ணீர்விட்டும், சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெறும் நிதி உதவிகள் மூலம் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு, கிழக்கு இன்று சிங்கள மயமாக்கவும், பௌத்தமயமாக்கவும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் முகாம்களில் உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, உடுக்க உடையின்றி தினமும் இறந்து கொண்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது சிறீலங்காவில் ராஜபக்சவின் அரசியல் கட்சி 2004ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை முப்பத்துநாலு தமிழ் சிங்கள பத்திரிகையாளரும், ஊடகவியல் ஊழியரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்காவின் ஜனநாயகத்திற்கு மேலும் கிடைத்த படுதோல்வி!கூதலாக மன்னர் ஆட்சி நடைபெறும் மத்திய கிழக்கில் கூட, இவ்வளவு பெரும் தொகையான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சரித்திரமே கிடையாது!

பயங்கரவாதச்சட்டமும் அவசரகாலநிலமையும்

சிறீலங்காவில், 1979ம் ஆண்டிலிருந்து சர்வதேச கோட்பாடுகள், சட்டங்களுக்கு முரணான ‘பயங்கரவாதச் சட்டம்’ அமுலிலிருந்து வருகிறது. அத்துடன் அவசரகாலநிலையும், சிறீலங்காவின் ஆட்சியாளர் விரும்பியவற்றை சாதிப்பதற்கு அனுமதிக்கிறது. இந்த அடிப்படையில் ஆட்சியியாளருக்கு எதிராக குரல்கொடுக்கும் சகலரும், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்படுகின்றனர்.

இந்த வரிசையில் கடந்த வருடம் தனது பத்திரிகையை அச்சடிப்பவர்கள் வவுனியா காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டதை அறிந்து அவர் என்ன நடந்தது என்பதை விசாரிக்கச் சென்ற பிரபல பத்திரிகையாளர் திரு.ஜே.எஸ்.திசநாயக சிறீலங்காவின் காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இதன் பின்னர் அவர் மீது சில குற்றச்சாட்டுக்களை விசமத்தனமாக தேடி எடுத்து, இன்று ஜே.எஸ். திசநாயகத்திற்கு இருபது வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை சிறீலங்காவின் நீதியற்ற மன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெட்கம், இதுதான் சிறீலங்காவின் மகிந்த ராஜபக்சவின் ஜனநாயகமா? திரு. திசநாயகம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மிக வேடிக்கையானது. திசநாயகம் அவர்கள் அவரது கட்டுரைகள் மூலம் சிறீலங்காவில் இனத்துவேசத்தை தூண்டினராம்!

ராஜபக்சாவும், திசநாயகமும்

உண்மையை ஆராய்வோம், கதைப்போம், எழுதுவோம்! உண்மையில் யார் சிறீலங்காவில் இனத்துவேசத்தை தூண்டுவது? திசநாயகமா? அல்லது ராஜபக்சாவும் இவரது அமைச்சர்களும் சகாக்களுமா? சிறீலங்காவில் ஜே.வி.பி அத்துடன் அமைச்சர்கள் பேசும் இனத்துவேசத்தைவிட பத்திரிகையாளர் திசநாயகம் என்னத்தை எழுதியுள்ளார்?

அண்மைக்காலங்களில் ஜனாதிபதி ராஜபக்சா தனது உரைகளில், முன்னைய இனத்துவேசியான சிங்கள அரசன் துட்டகைமுனுவை உதாரணமாக காட்டி தனது உரைகளை நிகழ்த்துகிறாரோ அப்படியான இனத்துவேசத்தை தூண்டும் மகிந்த ராஜபக்சவுக்கு எத்தனை ஆண்டுகள் சிறீலங்காவின் நீதியுள்ள மன்றங்களினால் தீர்க்க முடியும்?

பத்திரிகையாளருக்கு கடூழிய சிறை?

நீதிமன்றமென கூறப்படும் சிறீலங்காவின் நீதி மன்றம் ஓர் பத்திரிகையாளருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதிபதிகளில் கோர இனத்துவேசத்தை மிக வெளிப்படையாகக் காட்டுகிறது! முன்பு ஒருபோதும் எந்தத் தண்டனைக்கு ஆளாக்கப்படாதவருக்கு கடூழிய சிறைத்தண்டனை?

இதுதான் சிறீலங்காவின் ஜனநாயகமா? மிகச் சுருக்கமாகக் கூறுவதனால் உண்மையை எழுதிய ஓர் தமிழ் பத்திரிகையாளருக்கு சிறீலங்காவில் நீதியற்ற மன்றமும் நீதியற்ற நீதிபதிகளும் இருபது வருடகால கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளனர்.

ச.வி.கிருபாகரன்

நன்றி: ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*