TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பௌத்த பேரினவாதத்தை திருப்திப்படுத்த அதீத ஈடுபாடு காட்டும் மஹிந்த ராஜபக்ஷ

Budவரலாற்றுச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துமா தென்னிலங்கை?

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் கடந்த பெப்ரவரி முதல் மே வரையான காலப் பகுதியில் இலங்கை அரசுப் படைகளோடு சேர்ந்து யுத்தமுனைக்குச் சென்று செய்தி சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்களுள் ஒருவர் என்.டி.ரி.வியின் செய்தியாளரான நிதின் ஏ.கோகலே. இந்தியரான அவர் தமது யுத்தமுனை அனுபவங்களை ஒன்றுதிரட்டி ஒரு புத்தகத்தை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டுமுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் “ரெடிப்” ஆங்கில இணையத் தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

“வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிவந்த மக்களின் தேவைகளை எதிர்கொள்வதற்கு எவருமே தயாராக இருக்கவில்லை. அவர்களைப் பராமரிக்க முடியாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியவில்லையாயின் குறைந்த பட்சம் அவர்களைச் சுதந்திரமாகவேனும் விட்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. மொத்தத்தில் மனிதாபிமான விடயங்களைக் கையாள்வதில் இலங்கை தோல்வியடைந் துவிட்டது.”

இப்படி நிதின்கோகலே குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மையாகும்.

புலிகளைத் தோற்கடித்தமையை மார்தட்டிக் கொண்டாடுவதில் காட்டிய கரிசனையை சிரத்தையை கவனத்தை இந்த ஏதிலிகளைப் பராமரிக்கவேண்டிய அவசர விடயத்தில் தென்னிலங்கை காட்டவேயில்லை என்பதுதான் நிஜம்.

யுத்தம் முடிவுற்றதாக அரசு அறிவித்து நான்கு மாத காலமாகியும் இன்னும் அந்த அகதிகளின் நிலைமை சீரடையவில்லை.

யுத்தத்தின் நேரடியான அதிர்ச்சியுடன் யுத்த களத்திலிருந்து மீண்ட அந்த மக்கள், தாங்கள் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்குள் முள்வேலிகளுக்குப் பின்னால் முடக்கப்பட்டுக் கிடப்பதால் எழுந்துள்ள பேரவல அதிர்ச்சியிலிருந்தும் கூட இன்னும் மீளவில்லை.

இந்த ஏதிலிகளின் அவலநிலை இப்போதுதான் மெல்ல மெல்ல சர்வதேசத்துக்குச் சுடத் தொடங்கியிருக்கின்றது போலும். அதனால்தான் இந்த அகதிகள் குறித்து இப்போது சர்வதேசத் தரப்புகளால் அதிக சிரத்தையைக் காட்டும் விதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன எனலாம்.

இத்தகைய சர்வதேச அழுத்தங்களின் விளைவாக மேற்படி அகதிகளுக்கு மீட்சி கிட்டுமானால் குறைந்த பட்சம் சுதந்திரமாவது கிட்டுமானால் உரிய மனித நேய உதவிகள், மனிதாபிமான சேவைகள், அடிப்படை வசதிகள் போன்றவை வழங்கப்படாவிட்டாலும் கூட, ஆகக் குறைந்தது தமது சொந்தக் கால்களில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை, கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள், தடுப்புக்காவல் போன்றவற்றை நீக்கி, வழங்க முடியுமானால்
அதுவே அவர் களுக்குப் பேருபகாரமாகவும் பேருதவியாகவும் இருக்கும்.

ஆனாலும் அந்த உறுதிப்பாட்டைக் கூட அரசிடமிருந்து அவர்களுக்குப் பெற்றுத்தர இயலாத கையாலாகாத்தனத்திலேயே சர்வதேச சமூகம் இன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேசமயம், இன்றைய நிலைமை தொடர்பாக செய்தியாளர் நிதின் கோகலே சுட்டிக்காட்டும் மற்றொரு விடய மும் கவனிக்கத்தக்கது.

“இது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிட்டியுள்ள வரலாற்றுச் சந்தர்ப்பம். இதனைப்பிழைத்துப் போக அவர் விட்டுவிடக்கூடாது; அனுமதிக்கக்கூடாது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கையின் மீது சர்வதேச தலையீடு அதிகளவில் இருக்கின்றமையையும் கோகலே ஒப்புக்கொள்கின்றார்.
ஆனால், அந்தத் தலையீட்டு விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு சார்பாக அமைந்திருக்கின்றமையையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

“சர்வதேசத் தரப்புகளிடையே நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம். ஆனால் அதற்கு அர்த்தம் நீங்கள் நீதியாக நடந்துகொள்கின்றீர்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதல்ல” என இந்தியா இப்போது இலங்கைக்குத் தெளிவுபடக் கூறிவிட்டது.

அதாவது, மற்ற நாடுகள் போல நாம் உங்களுக்கு நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை வெளிப் படையாகவே ஆதரவு தருகின்றோம். அகதிகள் விடயத்தில் நீங்கள் நீதியாக நடந்துகொள்ளாத போதிலும் கூட சர்வதேச மட்டத்தில் எமது ஆதரவு உங்களுக்குத் தொடர்கின்றது.

இப்படியான உங்கள் நடத்தைக்கு மத்தியிலும் நாம் உங்களுக்கு ஆதரவு தருகின்றோம் என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. எமது இத்தகைய நிபந்தனையற்ற ஆதரவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமோயோசித வாய்ப்பாகப் பயன்படுத்த இலங்கை முன்வரவேண்டும் என்று இலங்கையைக் கோரியிருக்கின்றது இந்தியா.

இந்தியச் செய்தியாளர் கோகலே தெரிவிக்கின்றமை போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான உண்மையான சோதனை, அமைதியை சமாதானத்தை வென்றெடுப்பதுதான்.

ஆனால், பௌத்த சிங்களத் தீவிரவாதப் போக்குடைய தென்னிலங்கைப் பேரினவாதத் தரப்புகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதில் அதீத ஈடுபாடு காட்டும் மஹிந்த ராஜபக்ஷ, இப்போது தமக்குக் கிட்டியுள்ள இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன் படுத்தி நீதியான தீர்வைக் காண்பதற்கு தாராள விட்டுக்கொடுப்புகளோடு முன்வருவாரா?

இல்லை,பேரினவாதப் போக்கை மேலும் இறுக்கிப் பற்றிப் பிடித்து நின்று இந்த வரலாற்று வாய்ப்பைக் கோட்டை விடுவாரா? அதற்குப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*