TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கொழும்பு அரசின் ஆட்சிப் போக்கில் முக்கிய இரு வாரங்கள் இப்போது!

Uthaஇலங்கையைப் பொறுத்தவரை இந்த மாத இறுதி வரையான இந்த இரண்டு வார காலம் மிகமுக்கி யமானதாக அவதானிகளால் கருதப்படுகின்றது.

இலங்கையில் யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில், அதையொட்டிய விடயங்களில் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்ட கசப்புணர்வு ஒன்றுபட்டு பீறிட்டு வெளிப்படும் சாத்தியங்கள் தென்படும் கால மாகவும் இது மாறியிருக்கின்றது.

யுத்தத்தின் பேறாகக் கைதிகள் போன்று மடக்கப்பட்ட சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் தடுப்பு முகாம்கள் போலச் செயற்படும் நலன்புரி மையங்களில் முடக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதற்கான அடிப்படை ஏற்பாடுகளை உறுதி செய்வதில் தொடர்ந்து அசிரத்தை காட்டப்படுகின்றது .

ஊடக சுதந்திரம் மீதான அச்சுறுத்தல் தொடர்கின்றது. ஜனநாயகப் பண்பியல்புகளை நிலைநிறுத்துவதற்கு அவசியமான ஏற்பாடான அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதில் தொடர்ந்தும் உதாசீனம் நீடிக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மனிதப் பேரவல நிலைமை குறித்து சிரத்தையும், கவலையும் வெளியிட வேண்டிய பொறுப்பும், கடமையும், கடப்பாடும் கொண்ட தரப்புகள் அவ்விவகாரம் குறித்து கருத்து வெளியிடுகையில், அக்கருத்துகளில் குறிப்பிடப்படும் அம்சங்களை சீர்செய்வது குறித்துக் கவனிக்காமல், அத்தகைய கருத் துகளை வெளியிடும் சர்வதேசத்தரப்புகள் மீது கொழும்பு கெடுபிடி காட்டி, பாய்ந்து வருவதும் சர்வதேச மட்டத்தில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் குரல் ஒருமுகமாக வெளிப்படும் காலமாக இவ்வேளை பரிணமித்திருப்பதும் அவதானிக்கத்தக்கதாகும்.

உலக நாடுகளின் சர்வதேசப் பொதுமன்றமான ஐ.நா. இவ்விடயங்களில் தனது கவலையையும் சிரத்தை யையும் ஆழமாக வெளியிட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக நேற்றுமுன்தினம் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருக்கின்றார்.

அடுத்த கட்டமாக அவரின் விசேட தூதுவராக, அவரின் கீழ் அரசியல் செயலாளராகப் பணியாற்றும் லியன் பாஸ்கோ கொழும்பு விரைகின்றார். ஐ.நா.செயலாளர் நாயகம் இப்படி இலங்கை ஜனாதிபதியுடன் தொலை பேசியில் உரையாடிவிட்டு, அந்தக் கையோடே உடனடியாகவே தமது உயர்மட்ட அதிகாரியை விரைந்து கொழும்புக்கு அனுப்புகின்றமை இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் கரிசனை எவ்வளவு தூரத்துக்கு “ஸீரியஸ்’ ஆக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது.

இதேசமயம், ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் பன்னிரண்டாவது கூட்டத் தொடரில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையை கண்டித்துத் தெரிவித்தகருத்துகள், இவ் விவகாரத்தில் கொழும்புக்கு எதிராகத் திரண்டு வரும் சர்வதேசக் கருத்துத் தொடர்பில் பதம்பார்ப்பதற்கான ஒரு சோறு மட்டுமே.

இதற்கிடையில் இலங்கையில் கடந்த மே வரையான நான்கு, ஐந்து மாதக் காலப்பகுதியில் யுத்தம் உச்சம் பெற்றிருந்த சமயத்தில் இடம்பெற்றவை என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தனது அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அடுத்த வாரத்தில் வெளியிடவிருப்பதாகவும் கூறப் படுகின்றது.

அந்த அறிக்கை மேலும் பல திடுக்கிடும் சம்பவங் கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
அப்போது சர்வதேசத்தின் கவனிப்பும் சிரத்தையும் இலங்கை விவகாரத்தில் மென்மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உண்டு என சுட்டிக்காட்டப் படுகிறது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான விசேட வரிவிலக்கை ஜி.எஸ்.பி. பிளஸ்வரி விலக்குச் சலுகையை இலங்கை தொடர்ந்து பெறுவது தொடர்பில், இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கிளப்பியுள்ள வினாக்களுக்கு சந்தேகங்களுக்கு கொழும்பு விடையளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (15.09.2009) முடிவடை கின்றது.

இவ்விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு அடுத்த மாதத்தில்தான் வெளியாகும் என்று கூறப்பட்டாலும், அவ்விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப சமிஞ்ஞைகள் கூட, இந்த இரு வாரங்களில் பாதகமான முடிவு வெளிவர இருப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படி எல்லா வகைகளிலும் பார்த்தாலும் கூட இலங்கையின் எதிர்காலத் தலையெழுத்துப் போக்கைத் தீர்மானிக்கும் விடயங்கள் கட்டவிழும் காலமாக இந்த இரண்டு வாரங்கள் அமைந்திருப்பது கண்கூடு.

இந்தக் காலத்தை கொழும்பு எப்படி சமாளித்து எதிர் கொள்ளப்போகின்றது என்பதில்தான் எல்லாம் தங்கியுள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*