TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.

Pதமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமேசுவரம் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பதும் உண்டு. கச்சத்தீவை இந்திய அரசு தானம் கொடுத்தபோது கச்சத்தீவையொட்டியுள்ள பகுதி இந்திய இலங்கை மீனவர்களுக்கு பொதுவான பகுதி என்று ஒப்பந்தமாகியுள்ளது.

எனவே இந்திய மீனவர்களுக்கு அந்தப் பகுதியிலும் மீன் பிடிப்பதற்கு உரிமையுண்டு. விடுதலைபுலிகளால் இலங்கை அரசு பிரச்சினைகளை சந்தித்த காலங்களில் இந்திய மீனவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் கூட நடைபெற்று இருக்கிறது. தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

இந்த நேரத்தில் தொடர்ந்து சமீப காலமாகக்கூட மீனவர்கள் தாக்கப்பட்டார்கள். அதன் உச்சகட்டமாக நேற்றைய தினம் இலங்கை கடற்படை பகிரங்கமாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது. எந்த ஒரு அரசும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்திய அரசு இலங்கை தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் அரசு செயல்பட வேண்டும்.

நடைபெற்ற சம்பவத்திற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் மாதம் 6 ந் தேதி தமிழக பாரதீய ஜனதா கட்சி ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை எனது தலைமையில் நடத்தும். ஆர்ப்பாட்டம் குறித்த மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*