TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரச தலைவருக்கான தேர்தலும் அரசை அச்சுறுத்தும் தகவல்களும்

rajதமிழ் மக்களின் விடுதலைப் போர் ஆயுதப்போராட்டமாக மாற்றம் பெற்ற காலத்தில் இருந்து இந்த வருடத்தின் நடுப்பகுதியில் உக்கிர மோதல்கள் முடிவுக்கு வரும் வரையிலுமான காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்கு அதிக வறட்சிகள் இருந்ததில்லை.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியும், அவர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான போராட்டத்தை எவ்வாறு நசுக்குவது என்பது தொடர்பாக பேசி பேசியே ஆட்சி அதிகாரங்களை தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைப்பற்றி வந்துள்ளனர். சிறீலங்கா அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு படை நடவடிக்கையும் தென்னிலங்கையின் வாக்கு வங்கியை கவர்வதற்கு பயன்படுத்தப்பட்டன.

படை நடவடிக்கையில் முன்னிலை வகித்த படை அதிகாரிகளும் அரசியல் மேடைகளை அலங்கரித்திருந்தனர். ஆனால் தற்போது நிலமை தலைகீழான ஒரு மாற்றத்தை சந்தித்துள்ளது. விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிவை சந்தித்துவிட்டனர் என அரசு தெரிவித்த கருத்துக்கள் அரசின் இருப்பை தக்கவைப்பதில் பல நெருக்கடிகளை அரசிற்கு உருவாக்கி வருகின்றது.

போர் போர் என தமது வளங்களை இழந்த சிங்கள மக்கள் தற்போது தமது வாழ்க்கை சுமைகள் தொடர்பாக சிந்திக்க தலைப்பட்டுள்ளனர். போரின் போது மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா தொடர்பாக பல எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கியுள்ள சமயத்தில் தாம் உலக ஒழுங்கில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றோமா? என்ற சந்தேகங்களும் தென்னிலங்கை பெரும்பான்மை சமூகத்திடம் தலைதுாக்கியுள்ளது.

இழந்துபோன பொருளாதாரத்தையும், தமது வாழ்க்கை தரத்தையும் மேப்படுத்துவது எவ்வாறு என்ற மாற்று சிந்தனைக்குள் பெரும்பான்மை சமூகம் தள்ளப்பட்டால் அது தற்போதைய அரசிற்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அரசு உணர்ந்து கொண்டுள்ளது. தென்னிலங்கையில் நடைபெறும் சம்பவங்கள், அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்து வருகின்றது.

எனவே தான் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை முறியடித்த வெற்றி செய்திகளின் சூடு தணிவதற்குள் அரச தலைவருக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசு சிந்தித்து வருகின்றது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் அரச தலைவருக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசு திட்டமிட்டு வருகின்றது. ஆனால் அதற்கு மேலும் 4 தொடக்கம் 5 மாதங்கள் உள்ளன.

இந்த காலப்பகுதியில் அரச தரப்பு தனக்கு ஆதரவாக 50 விகிதத்திற்கு கூடுதலான ஆதரவை தக்கவைத்திருக்குமா என்பது தொடர்பாகவும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. உள்ளுராட்சி சபை தேர்தல்களின் முடிவுகளை கொண்டு அரச தலைவருக்கான தேர்தலின் முடிவை எதிர்வு கூறுவது சிரமமானது. மேலும் வடக்கில் ஏறத்தாள ஆறு இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கிழக்கிலும் கணிசமான அளவு வாக்குக்களை தமிழ் மக்கள் கொண்டுள்ளனர்.

அதிகளவில் இராணுவத்தின் அழுத்தங்களின் கீழ் உள்ள வடபகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சி சபைகளுக்கான தேர்தல்களும் சில தகவல்களை மறைமுகமாக அரசுக்கு உணர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அரச தலைவர் தேர்தல் தொடர்பாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சிகளும் தற்போது அதிக ஆர்வத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன அரசுக்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் பல எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. இதன் மூலம் அரசின் செல்வாக்கை குறைப்பதற்கு அவை முயன்று வருகின்றன.

இந்த நிலையில் சிறீலங்கா அரசு முன்னர் மேற்கொண்டு வந்த தனது பரப்புரைகளை தானே மறுதலிக்கும் பரப்புரைகளை மெல்ல மெல்ல மேற்கொண்டு வருகின்றது. அதாவது விடுதலைப்புலிகள் சிறீலங்காவில் இருந்து முற்றாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் இருந்து விலகி விடுதலைப்புலிகளின் சிறப்பு தாக்குதல் படை அணிகள் அரசின் முக்கிய பிரமுகர்களை வேகமாக குறிவைத்து வருவதாக அது தெரிவித்து வருகின்றது.

சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சாவை இரு தாக்குதல்களை ஒருங்கிணைத்து தாக்கி அழிக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்ததாக சிறீலங்கா படையினரின் புலனாய்வுத்துறை கடந்த வாரம் தெரிவித்துள்ளது. தற்கொலைத்தாக்குதல் மூலம் அவர் பயணிக்கும் வாகனத் தொடரணியை முதலில் தாக்கிய பின்னர், காயமடையும் ராஜபக்சாவை கொண்டு செல்லும் நோயாளர் காவுவண்டியை மேலும் ஒரு தற்கொலை தாக்குதல் மூலம் தாக்கி அழிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

இதனிடையே விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சிறீலங்கா காவற்துறை அதிகாரியான உதவி காவல்துறை அத்தியட்சகர் லக்ஸ்மன் குரொயின் உதவியுடன் இரண்டு அதிசக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகளை விடுதலைப்புலிகள் தென்பகுதியின் புத்தள பகுதிக்கு கொண்டுவந்துள்ளதாக படையினரின் புலனாய்வுத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

அவற்றில் ஒரு குண்டு சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா பயணம் செய்த உலங்குவானுார்தி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த மைதானத்தில் புதைக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அரச தலைவரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இடத்தை மாற்றியதால் தாக்குதல் இடம்பெறவில்லை. மற்றைய குண்டு அரச தலைவரின் வாகனத்தொடரணியை குறிவைத்து வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்தாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

படைத்தரப்பின் தகவல்களை நோக்கும்போது விடுதலைப்புலிகளின் புலனாய்வு கட்டமைப்பும், சிறப்பு தாக்குதல் படையணிகளும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. படைத்தரப்பின் தகவல்கள் உறுதியாகும் சமயத்தில் தாக்குதல் ஒன்று தென்னிலங்கையில் நடைபெறுமாக இருந்தால் அரசின் தற்போதைய பிரச்சாரங்கள் அனைத்தும் பெரும் பின்னடைவை சந்திப்பதுடன், தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மயைகளும் விலகிவிடும்.

அது அரச தலைவருக்கான தேர்தலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் தென்னிலங்கை மக்களின் அன்றாட வாழக்கை பிரச்சனையை திசைதிருப்புவதற்காக விடுதலைப்புலிகள் தொடர்பாக பொய்யான தகவல்களை அரசு பரப்பி வருமாக இருந்தால் அதுவும் அரசின் முன்னைய பிரச்சாரங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்த வல்லது.

எது எவ்வாறு இருப்பினும் தமது முக்கிய பிரமுகர்களை முற்றாக துடைத்தழிக்கும் வலிமையுடன் விடுதலைப்புலிகள் நிழல்போல தம்மை பின்தொடர்வதாக அரசு அச்சமடைந்துள்ளதாகவே தென்னிலங்கை தகவல்களில் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் அச்சங்களில் இருந்து தப்புவதற்காகவே வவுனியாவில் உள்ள தடை முகாம்களில் இரண்டரை இலட்சம் மக்களை அரசு மனிதக்கேடயங்களாக தடுத்து வைத்துள்ளதோ என்ற அச்சங்களும் தற்போது எழுவது தவிர்க்க முடியாதது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

ஈழமுரசு (11.09.09)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*