TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம்? நாடு கடந்த தமிழீழம்??

Tamil Eelamஇலங்கை அரசியல் வரலாற்றிலும், குறிப்பாகத் தமிழர் வரலாற்றிலும் ஓர் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த 60 ஆண்டு காலத்தின் பாதிப் பகுதியை ஓர் கொடுமையான அனுபவம் காவு கொண்டுள்ளது. ஆசிய நாடு களிடையே மிக நீண்ட ஜனநாயக வரலாற்றைக் கொண்டிருந்த இலங்கை அரசியல் கட்டுமானம், நாட்டில் மிக அதிகளவு காலத் திற்கு நீடித்த வன்முறை, பயங்கரவாதம் சார்ந்த அரசியல் என்பன அதனது மட்டத்திற்கு அரசையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. அரசு இயந்திரமும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தனது அணுகுமுறையாக மாற்றிக் கொண்டது. இதனால் மொத்த சமூகமும் இராணுவ மயமாக்கப்பட்ட தோடு, அரசுக் கட்டுமானங்களில் இராணுவத் தலையீடும் செல்வாக்கும் மிக அதிகளவு வளர்ந்துள்ளது.

இவ்வாறு சமூகமும் அரசும் மாற்றமடைந்துள்ளமைக்கு தமிழ் மக்கள் மத்தியிலே மூன்று தசாப்தங்களாக கோலோச்சி வந்த ஜனநாயக விரோத, வன்முறை அரசியலே காரணமாக அமைந்தது எனில் மிகை ஆகாது. இந்த நிலைமைக்குக் காரணம், அரச கட்டுமானம் என்ற இயந்திரம் சிங்கள பேரினவாத அரசின் கருவி யாக தொழிற்பட்டமையாகும். இந்த மூன்று தசாப்த கால அரசியல் என்பது தமிழர்களின் வரலாற்றில் உச்சக்கட்டமாகும். குடியேற்றவாத சக்திகளினால் வழங்கப்பட்ட அரசு நிர்வாகம் பக்கச் சார்பாக செயற்பட்டு சிறுபான்மை இனங்களின், குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின், அரசியல், சமூக, பொருளாதார வாழ்வை ஒடுக்கி உள்ளதால் இனியும் அவ்வாறான அரசு நிர்வாகத்தின் கீழ் வாழ முடியாது என்று தீர்மானித்து, ‘தனித் தமிழ் ஈழம்’ என்ற கோரிக் கையை முன்வைத்தே வன்முறை சார்ந்த அரசியல் தொடரப்பட்டது.

ஆயுதம் தாங்கிய வன்முறை அரசியலுக்கான நியாயங் களாக 1976இல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத் தையும் அதன் பின்னர் அத்தீர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் இடம்பெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவையும் ஆதாரமாக வைத்தே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்ப மாகியது. இந்த இரண்டு சம்பவங்களும், அதாவது, வட்டுக் கோட்டைத் தீர்மானம், 1977ம் ஆண்டின் தேர்தல் வெற்றிகள் என்பன அன்று செயற் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைமைக்கு கிடைத்த ஆணையாகும். தமிழ் ஈழக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு மக்கள் ஆணை அதன் தலைமைக்கு வழங்கப்பட்டது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்த அமைப்பு தமிழர் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தமைக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அவ்வாறு இருக்கவும் இல்லை. தமிழர் கூட்டணியின் செயற் பாடுகளை மிகவும் தீவிரமாக விமர்சித்து அதன் தலைமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை, தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் தமிழ்பேசும் மக்கள் தமிழீழத்திற்கு ஆதரவான ஆணையைத் தமக்கு வழங்கியதாகக் கூறுவது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ் ஈழக் கோரிக்கையை யாராவது பெற்றுத் தரவேண்டும் எனத் தமிழ் பேசும் மக்கள் தீர்மானத்தையோ ஆணையையோ வழங்கவில்லை. அதனைப் பெறுவதற்கான நம்பிக்கையான தலைமையைத் தேர்ந்தெடுத்து அதற்கே தமது வாக்குகளையும் வழங்கினார்கள்.

நாடு சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளுக்குள் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ் அரசியல் தலைமைகள் தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம், அரசியல் தலைமைகளின் பலவீனமா? அல்லது அடைய முடியாத கோரிக்கைகளை மக்கள்முன் எடுத்துச் சென்று அந்த மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பறித்து அரசியல் அதிகாரத்தை அமைக்க வாய்ப்பைப் பெற்றார்களா? தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம் சிங்கள அரசியல் தலைமைகளே என்ற ஒரே குற்றச்சாட்டு இத்தோல்விகளுக்குப் போதுமான சாட்சியமா? இலங்கையின் அரசியல் தலைமையைப் பல்வேறு கட்சிகளும் தலைவர்களும் அலங்கரித்த நிலையில், சகல அரசியல் தலைமைகளும் ஒரேமாதிரியான போக்கைக் கடைப் பிடித்தார்கள் என்று சப்பைக் கட்டுப் போடமுடியுமா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் தமது அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மாற்று வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்தார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்குப் பதிலைத் தேடும்போது தமிழ்த் தலைமைகள் சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி அனுகூலமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திச் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். இதுவே விடுதலைப்புலிகளின் அழிவுக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

கடந்த 60 ஆண்டு கால தமிழ் அரசியல் பரந்த, அகன்ற இலங்கைக்குள் தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் சமூக பொருளாதார அரசியலை நோக்கித் தனது அரசியலை நகர்த்தவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி, விடுதலைப் புலிகள் அமைப்பு என்பவற்றின் அஸ்த மனம் என்பது அதன் தமிழீழக் கோரிக்கையின் இயலாத் தன்மையைத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இந்த 60 ஆண்டு கால அரசியல் அனுபவங்களில் இருந்து தமிழ் மக்கள் மாற்றம் பெற வேண்டுமாயின் புதிய அணுகுமுறையை, புதிய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். போர்க்கால நிலைமைகளில் இருந்தும் அதன் அனுபவங்களில் இருந்தும் வெளிக்கிளம்பும் அரசியல் நடை முறை புதிய பாதையை உணர்த்தி நிற்கிறது. கடந்த காலத் தோல்வியின் அனுபவங்கள் காரணமாக எழுந்துள்ள தவிர்க்க முடியாத புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் மாற்றம் பெறுவதை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.

இதுவே புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக உள்ளது. இந்த மாற்றங்கள் புதிய வகையிலான அரசியல் அணுகுமுறையை நிர்ப்பந்திக்கிறது. மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் பலம் முழுமையாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் என்பது வெறு மனே தமிழ் மக்களின் உரிமைகள் என்ற வரையறைக்குள் அடங்கிவிடமுடியாது. முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் காத்திரமான அரசியல் அகதிகளாக மாற்றம் பெற்றுள்ளார்கள்.

அம்மக் களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத் தேவைகள் கணிசமாக வளர்ந்துள்ளன. அத்துடன் அவை தனித்துவமான அடையாளங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலைமையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கான குரல் தமிழர்களின் குரலாக மட்டும் ஒலிக்க முடியாது. அது பரந்த ஏனைய சிறுபான்மை மக்களினதும் ஒருமித்த குரலாக மாற்றம் பெற வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் தோல்வி சிங்கள தேசியவாதத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சிறுபான்மை இனங்களின் எழுச்சியை தனது எண்ணிக்கைப் பெரும்பான்மையாலும் இனவாத அரசியலாலும் ஒடுக்கிவிட எண்ணுகிறது.

வளர்ந்துவரும் முதலாளித்துவ திறந்த பொருளாதார ஒழுங்கு முறை, இனவாத அரசியலுடன் கைகோர்த்துச் செல்ல முடியாது. சந்தைப் பொருளாதாரப் போட்டியில் பெரும்பான்மை, சிறுபான்மை, தமிழ், சிங்களம் போன்ற இன மொழி பேதம் அதன் சுமுகமான இயக்கத்திற்குக் குந்தகமாக அமைகிறது. இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் மிக இறுக்கமாப் பிணைக்கப்பட்டிருப்பதால் இலங்கை அரசின் ஆளுமை என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சர்வதேச சட்டவிதிகளுக்கு அதுவும் இணங்கிச் செல்லும் நிலைக்கு நிர்ப்பந்திக் கப்படுகிறது. சமீபத்தில் இடம்பெற்ற போரின் இறுதிக் காலத்தில் தமிழர்கள் பலர் இலங்கை அரசுக்கான அழுத்தங்களை சர்வ தேச அரசுகள் மூலமாகவே பிரயோகித்தார்கள். பல்வேறு சர்வ தேச அரசுகளையும் சமூக நிறுவனங்களையும் நிர்ப்பந்தித் தார்கள். இவை யாவும் தற்போது மாறியுள்ள அரசியல் தேர்வு களையே உணர்த்தி நிற்கின்றன.

இந்தப் பின்னணியில் இருந்து நோக்கும்போது, இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின், குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான புதிய வழிமுறை என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள சூழலில் இரண்டு விதமான போக்குகள் காணப்படுகின்றன. ஒரு சாரார் கடந்த நீண்டகால அனுபவங்களில் இருந்து பெற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் ஜனநாயக அரச கட்டுமானத் தைத் தோற்றுவிப்பதும், அவ்வாறான ஓர் நிர்வாகத்தில் தேசிய சிறுபான்மை இனங்களின் பங்களிப்பை சகல மட்டங்களிலும் உறுதி செய்யக்கூடிய விதத்தில் அரசியல் அமைப்பைத் தோற்றுவிப்பதை நோக்கியே விவாதங்கள் நகர்த்தப்படுகின்றன. மறு புறத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள் கடந்தகாலத் தோல்விகளுக்குக் காரணமாக இருந்த அம்சங்கள், மீண்டும் புதிய அணுகு முறையில் முன்வைக்கப்படுகின்றன. ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற கருத்துருவாக்கம் கடந்த காலத் தோல்விகளின் அடிப்படையில் எந்த அனுபவங்களையும் பெற்றதாகத் தெரிய வில்லை. அத்துடன் 30 வருடகால ஆயுத வன்முறையை நியாயப்படுத்திய அதே சக்திகள் அப்போராட்டத்திற்கான தோல்வியை இலங்கை, இந்திய அரசு மற்றும் சர்வதேச அரசுகளின்மேல் சுமத்தி தோல்விக்கான காரணம் சர்வதேச சூழ்ச்சி அரசியலே எனக்கூறி தமது பங்கினை முற்றாக மூடி மறைக்கும் ஓர் முயற்சியாகவே உள்ளது.

புதிய அத்தியாயம் ஒன்று திறக்கப்படும் இச் சூழலில் வெளிவரும் கருத்துருவாக்கம் மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் அணுகப்பட வேண்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகால வன்முறை, அராஜகம் கோரத்தாண்டவம் ஆடிய காலத்தில் கருத்துரீதியான பரந்த பரிமாற்றம் ஒன்றுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆயுத வன்முறையும் இராணுவ அடிப்படையிலான வாதங்களுமே நிகழ்ச்சிப் போக்கைத் தீர்மானித்து வந்தன. தற்போது ஆயுதத்தின் தோல்வி பலராலும் புரியப்பட்டுள்ள நிலையில், பலமான கருத்துப் பரிமாற்றத்தின் தேவை அவசிய மாகியுள்ளது.

இப்பின்னணியைக் கருத்தில் கொண்டே தற்போது முன்வைக் கப்படும் விவாதங்கள் பற்றிய வாதங்கள் முன் வைக்கப்பட வேண்டியுள்ளது. அந்தவகையில் “நாடு கடந்த தமிழீழம்” என்ற கருத்துருவாக்கமும் அதன் நியாயப்படுத்தல்களும் ஆய்வுக்குட் படுத்தப்படவேண்டியுள்ளது.

இக்கோரிக்கையானது எந்த மக்களின் நலன்களை நோக்கி யதாக உள்ளதோ, அந்த மக்களிடம் இருந்து வெளிவரவில்லை. பதிலாக, வெளிநாடுகளில் குறிப்பாக, மேற்கு நாடுகளில் குடியேறி நிரந்தரமாக வாழ்விடங்களை அமைத்துள்ள வசதி படைத்த தமிழர்களில் ஒரு சாராரினால் முன்வைக்கப்படுகிறது. கணிசமான தமிழ் மக்கள் கொழும்பிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் நிரந்தரமாகக் குடியேறி, பலமான சமூகக் குழு வினராக வளர்ந்து வரும் தற்போதைய நிலையிலும் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களின் அரசியல் தலைமைகள் அகன்ற இலங்கைத் தேசியத்துக்குள் தமது சமூக, பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வரும் பின்னணியிலும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமைகளை சற்றும் கவனத்திற் கொள்ளாது ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற கருத்துருவாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற முயற்சிக்கான ஆதாரவாதமாக இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்றதாகி யுள்ளதால், தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கான முன்னெடுப்பு அதுவென குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்றதாகி உள்ளது என்றால், கிழக்கு மாகாண சபை நிர்வாகம், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய வற்றிற்கான உள்ளுராட்சித் தேர்தல்களில் பல அரசியற் கட்சிகள் போட்டியிடுவதை நாம் எவ்வாறு அவதானிக்கிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தேர்தல் வாக்களிப்பில் கலந்துகொள்கிறார்களே, இப்பங்களிப்பை நாம் எவ்வாறு வகைப்படுத்துவது?
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் திட்டமிட்ட விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும், கொலை கள், கடத்தல், வன்மையான அடையாள அழிப்பு, நிலப் பறிப்பு, இனச் சுத்திகரிப்பு என்பவற்றால் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்படுவதாக வாதிக்கின்றனர். இவ்வாறான வாதங்கள் தமிழ் அரசியலுக்குப் புதியன அல்ல. கடந்த 60 ஆண்டு காலமாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு மாற்றுத் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. அவையாவும் தோற்றுப் போனமைக்குக் காரணம் என்ன? 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் தந்த விளைவுகள் என்ன? ‘நாடு கடந்த தமிழீழம்’ அதற்கான பரிகாரமாக எதைத் தரப் போகிறது?

இலங்கைத் தீவில் தமிழர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழிகள் எதுவுமே இல்லை என்பதால் தீவுக்கு வெளியிலே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவே இந்த முயற்சி என வாதிக்கப் படுகிறது. இவ்வாறான அனுமானம் உள்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பாக சுதந்திரமாக எந்த முயற்சி யையும் மேற்கொள்ளாதவாறு தடுக்கிறது. அர்த்தமுள்ள எந்தத் தீர்வையும் முன்வைக்கவோ, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ இடையூறாக அமைகிறது. ஏனெனில் ‘நாடு கடந்த தமிழீழம்’ என்பது அந்த மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் கெளரவமாக வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் வழிகளைத் தடுக்கிறது.

இத் தமிழீழ அரசின் உருவாக்கம் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு, சில முக்கியமான அம்சங்களை மீளவும் பலப்படுத்த உத்தேசித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். அதாவது, 1976இல் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977இல் மக்கள் வழங்கிய தேர்தல் அங்கீகாரம், 1985இல் இடம்பெற்ற திம்புப் பிரகடனம், 2003இல் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை போன்றவற்றை மையமாக வைத்தே அதன் கட்டுமானம் அமையுமென குறிப்பிடுகின்றனர். ஆனால் இத்தீர்மானங்களை முன்னெடுத்த அமைப்புகளின் எந்தவிதமான சம்மதமோ, அங்கீகாரமோ பெறப்படாமல், எவரும் அவற்றை முன்வைத்து அரசியலை முன்னெடுக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. இதில் இத்தமிழீழக் கோரிக்கையின் அடித்தளமாகக் கொள்ளப்பட்டுள்ள
# தமிழர் ஓர் தேசிய இனம்
# வடக்கும் கிழக்கும் தமிழர் தாயக நிலம்
# ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை
என்ற கோட்பாடுகளே முக்கியமான பிரச்சினைக்குரிய அம்சங்களாகவும் புதிய அரசியல் பாதைக்குரிய விவாதப் பொருளாகவும் அமைகிறது.

தமிழர் ஓர் தேசிய இனம் என்பது இலங்கையில் பல்வேறு வழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையிலேயே கடந்த காலப் பேச்சுவார்த்தைகள், தீர்வுகள், என்பன நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பண்டா-செல்வா ஒப்பந்தம், இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பன அதனை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டனவாகும். ‘தமிழர் ஓர் தேசிய இனம்’ என்ற வற்புறுத்தல் ஏனைய சிறுபான்மை இனங்கள் தொடர்பாக இவர்களின் நிலைப்பாட்டினை கேள்விக்குட் படுத்துகிறது. முஸ்லிம் மக்கள் தங்களை ஒரு ஓர் தேசிய இனமாக வரையறுத்துச் செல்கின்ற நிலைமையில், இக் கோரிக்கையை முன்வைப்போர் அக்கோரிக்கை தொடர்பாகவும் தமது உறவுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது. அத்துடன் முஸ்லிம் மக்கள் ஓர் தேசிய இனம் அல்ல எனவும் அவர்களும் தமிழர்களே எனவும் விடுதலைப்புலிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அந்தக் கருத்துக்களின் அபிப்பிராயங்கள் வெளியிடப்பட வேண்டும்.

‘வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்’ என்ற கோட்பாடு சிங்கள மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இக் கோட்பாடு பிரிவினையை மையமாகக் கொண்ட தமிழீழக் கோரிக்கையுடன் இணைத்தே இதுவரை பேசப்பட்டு வருகிறது. இதனால் பிரிவினையை எதிர்ப்பதற்கான பிரதான அம்சமாக தாயகக் கோட்பாடே காணப்படுகிறது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. இதற்கான பிரதான காரணம், அது தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசங்கள் என்பதேயாகும். பிரிவினைக்கான எத்தனிப்புகள் காணப்படும்வரை தமிழர் தாயகக் கோட்பாட்டினை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் வெளிப்படையாக தாயகக் கோட்பாட்டை நிராகரித்தார். கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையும் பிரிவினையை வலியுறுத்தும் தமிழீழக் கோட்பாடும் மிகவும் வெளிப்படையான விதத்தில் நிராகரிக்கும் நிலைக்கு இப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது. இனப் பிரச்சினைக்கான சுமுகமான தீர்வை நோக்கிச் செல்வதாயின் பிரிவினையை மையப்படுத்தும் அரசியல் கோரிக்கைகள் நிலைமைகளை மாற்றப் போவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதன் காரணமாக, இப்பிரதேசங்களை இணைத்த ஓர் தனி நிர்வாகத்தை இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவாக்கியது. இந்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் நிராகரித்ததன் மூலம், ஓர் நிர்வாகக் கட்டுமான வாய்ப்பை இழக்கச் செய்ததோடு, மிக அதிக அளவிலான உயிர் இழப்பினையும் இந்திய நல்லுறவினையும் இழக்க நேரிட்டது. இனப்பிரச்சினைக் கான சுமுகமான தீர்வு காணப்பட வேண்டு மாயின் சகல இனங்களினதும் நல்லிணக்கம் அவசியமாகிறது. இதனை ஏற்படுத்துவதற்கு இத்தாயகக் கோட்பாடு இடையூறாகவே அமைகிறது. இங்கு தாயகக் கோட்பாடு சரியா, தவறா என்பதை விடவும் இவ்வாறான கோரிக்கைகளை மாற்று வழிகளில் முன்வைக்க முடியாதா என்பதே இங்கு எழும் கேள்வி யாகும்.

சுதந்திர காலத்தில் இருந்து இற்றைவரை வடக்கு, கிழக்கு மக்களிடையே காணப்பட்டு வரும் உறவுநிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, ஆயுத வன்முறை முஸ்லிம்கள் மத்தியிலே எழுப்பியுள்ள சந்தேகங்கள், புதிய அரசியல் விழிப்புணர்வுகள், இரு மாகாண இணைப்புக் குறித்த ஏக்கங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாகாணசபை, இணைப்புத் தொடர்பாக மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கில் அரச ஆதரவுடன் இடம்பெறும் புனிதப் பிரதேசப் பிரகடனங்கள், சிங்கள மக்களுக்கான குடியிருப்புகள், ஒரு புறத்தில் தமிழ் மக்களுடனான இணைப்பின் தேவையை முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள போதிலும் தமிழர் தரப்பில் காணப்படும் அரசியல் தலைமுறையின் மாற்றங்களே மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

ஈழத்தமிழருக்கான தன்னாட்சி உரிமை என்பதும் வடக்கு, கிழக்கு தாயகக் கோட்பாடும் கடந்தகால அரசியல் மூலம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் சாராம்சம் இவற்றை உள்ளடக்கியதாகவும் காலப்போக்கில் ஒரு வளர்ச்சியடைந்த அமைப்பாகவும் வளரும் என எதிர்பார்க் கப்பட்டது. ரோமாபுரி ஒரு நாளில் கட்டி முடிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுவதுபோல, வடக்கு- கிழக்கு தாயகம், தன்னாட்சி உரிமை என்பன ஓர் நீண்டகால எதிர்பார்ப்பில் அமையக்கூடிய நிர்வாகக் கட்டுமானத்தின் மூலமே அது சாத்தியமாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இலங்கையில் நிலவிய பயங்கரவாதம், வன்முறை என்பன அரச நிர்வாகத்தையும் அதன் மட்டத்திற்குக் கீழே இழுத்துச் சென்றுள்ள நிலையில் வடக்கு-கிழக்கு தாயகக்கோட்பாடு, தன்னாட்சி உரிமை என்பன தவறான வழியில் வன்முறையோடு இணைக்கப்பட்டு முன்வைக்கப் பட்டதால் நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன. இந்நிலைமையில் நாட்டில் நிலவிய ஜனநாயகமும் பலவீனப்பட்டுப் போயுள்ள வேளையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் வெல்லப்படவேண்டுமெனில், முதலில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. ஜனநாயகம் தழைக்கும் போதுதான் ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகள் அர்த்த முள்ளவைகளாக மாறுகின்றன. நாடு முழுவதும் இராணுவச் சூழலும் அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியும் தொடர்ந்து நிலவும்போது எவ்வகையான மாற்றம் முதலில் அவசியம் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். இந்த அடிப்படைகளை நோக்கும் போது ‘நாடு கடந்த தமிழீழம்’ என்ற கருத்தியல் மீண்டும் முரண்பாடுகளை நோக்கிச் செல்லும் பயணமாகவே அமைகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்து மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது. கடந்தகால அனுபவங்களும் சர்வதேச அரசுகளின் போக்கும், குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறையும், நாடு கடந்த தமிழீழக் கருத்தியலை முற்றாக நிராகரிப்பனவாகவே உள்ளன. ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள தீர்வை நோக்கி எடுக்கப்படும் முயற்சிகளை இவ்வாறான போக்குகள் தடுத்து விடும். அத்துடன் இலங்கை அரசுக்கு எதிரான சதி முயற்சியாகவே இவை கொள்ளப்படும். நாடு கடந்த தமிழீழக் கோரிக்கையை வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் ஆதரிப்பார்களானால் அவர்கள் தாயகத்திற்குச் செல்வது சிக்கலாகும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் விபரங்கள் சர்வதேச உளவுப்பிரிவினரின் கைகளில் சிக்கியுள்ளன. இதே நிலையே இத் தமிழ்ஈழக் கோரிக்கையின் பின்னால் செயற்படுபவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

இக் கோரிக்கையை பாலஸ்தீனர்களின் வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்ட நிழல் அரசு, கிழக்குத் திமோர் மக்களால் வெளி நாடுகளில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு போன்றவற்றை, இம் முயற்சிகளுக்கு ஒப்பாகக் காட்டுவது ஒரு வகையில் ஏமாற்று முயற்சியாகும். பாலஸ்தீன மக்களின் வரலாற்று நிகழ்வு சர்வ தேச அரசுகள் இஸ்ரேலிய அரசின் கொடுமையான போக்குகள் என்பன வெளிநாட்டில் இயங்கும் நிலைமைக்குத் தள்ளின. அத்துடன் உள்நாட்டில் போராட்டங்களை நடத்திய தலைவர்களே வெளிநாட்டில் நிழல் அரசைத் தோற்றுவித்துச் செயற்பட்டார்கள். இந்த நிழல் அரசை பல்வேறு நாடுகள் அங்கீகரித்து அதற்கான காரியாலயங்களை நிறுவி தூதுவராலயங்கள் போன்று அவை செயற்பட்டன. இந்த நிழல் அரசே காலப் போக்கில் பாலஸ்தீன அதிகார சபையாக செயற்பட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியை மறைத்து அம்மக்களின் நிழல் அரசை வைத்து, நாடு கடந்த தமிழீழ அரசின் கருத்தியலை நியாயப்படுத்தும் முயற்சியானது, பாலஸ்தீன மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதாகும். இதேபோன்று நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிநாடுகளில் ஏற்படுத்திய நிழல் அரசு போன்றவற்றை உதாரணம் காட்டுவது, அப்போராட்டங்களின் வரலாறுகளைத் திரிபுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கோரிக்கையின் பலம் என்பது அதற்கான நியாயத் திற்தான் தங்கியுள்ளது. இதனை விடுத்து, சர்வதேசரீதியான போராட்டங்களை உதாரணம் காட்டுவது அல்லது வட்டுக் கோட்டைத் தீர்மானம், 1977இன் தேர்தல் என்பவற்றை இன்னமும் சாட்சியமாக்கி நியாயப்படுத்த முடியுமா? இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்த காரணத்தினால்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கோரிக் கையை முன்வைத்த பின்னர், இலங்கை – இந்திய ஒப்பந்தம், சந்திரிக்கா அரசுடனும் ரணில் அவர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகள், ஒஸ்லோ பிரகடனம் என்பன வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் பின்னரும் மாற்று அணுகுமுறையை நோக்கி மேற்கொண்ட செயற்பாடுகளாகும்.

இந்த வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் முன்னெடுப்புகள் அவற்றின் தொடர்ச்சியாகவே உள்ளன. கடந்த காலத்தில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அவற்றைத் தமது நாட்டுப் பிரிவினைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் முயற்சியாகவே பயன்படுத்தினார்கள். இதுவே சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.

இவ்வரலாற்றுத் தோல்விகளுக்கான பிரதான காரணமாக இருந்தது, பிரிவினை சார்ந்த அரசியலே என்ற முடிவுக்கு நாம் வருவோமாயின், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள தீர்வை நோக்கிச் செல்லும் வழிமுறையை முழுமையாக நம்பி அதன் வழியில் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுவதே பொருத்த மானதாக அமையும்.

உயிர்நிழல் இதழ் : 31 – வி. சிவலிங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*