TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! : ஈழநாடு ஆசிரியர் சி. பாலச்சந்திரன்

saபழுத்த அரசியல்வாதியும், சிறந்த சிந்தனையாளரும், தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உயர்திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் எழுதும் திறந்த மடலின் முழுவடிவம் கீழ்வருமாறு:-

ஐயா!

கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிந்தனைத் தெளிவுடனும் இலட்சிய வேட்கையுடனும் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்கோடு இணைந்து செயற்பட்ட தங்களது புனிதமான அரசியல் பயணம் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது என்பதில் பெருமை கொள்கின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது மாறாத ‘தமிழீழத் தாயக’ இலட்சியத்திற்கு நேர்மையாக இருந்து அரசியல் தளத்தில் தாங்கள் ஆற்றிய பங்கு பெருமைக்குரியவை என்பதில் சந்தேகம் கிடையாது. சிங்கள தேசத்தின் பேரினவாத அரசியலாளர்களை எதிர்கொண்டு, தாங்கள் வேங்கை போலக் கர்ச்சித்த வீரத்தைக் கண்டு நாம் மகிழாத பொழுதில்லை.

சாபங்களுக்குட்பட்ட ஈழத் தமிழர்கள் துரோகிகள் துணையோடு தோற்கடிக்கப்படும் வரை நீங்கள் நேர் பாதையில் மட்டுமே பயணித்தீர்கள். அல்லது அவ்வாறு மட்டும்தான் பயணிக்க முடியும் என்ற வரையறைக்குள் மட்டுமே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டீர்கள். அப்போது, விடுதலைப் புலிகள் பலத்தோடு களத்தில் நின்றார்கள். அந்தப் பலம் உங்கள் பாதையையும் செப்பனிட்டுத் துணை நின்றது.

விடுதலைப் புலிகளின் களமுனைத் தோல்வியும், இழப்புக்களும் உங்களைப் போலவே எங்களையும் பலவீனப்படுத்திவிட்டது என்பதில் மாறுபாடு கிடையாது. நிமிர்ந்து நின்ற நீங்களும் நாங்களும் அந்த ஒரு சில நாட்களில் நிலை குலைந்து தடுமாறித்தான் போய்விட்டோம். ஆனாலும், தலைவனின் கட்டளை எங்களை மீண்டும் நிமிர வைத்தது. நாம் முன்னரை விடவும் அதிக வேட்கையுடன் நிமிர்ந்து நிற்கின்றோம். எங்கள் தலைவன் எங்களுக்கு வழங்கிய அந்தத் திமிருடன் சிங்களத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம்.

ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பிளவுபடுத்திப் பார்க்க முடியாத சக்திகளாக நாங்களும் நீங்களுமே எஞ்சி இருக்கின்றோம். சிங்கள தேசத்தால் கட்டுப்படுத்த முடியாத, கைகளுக்கு எட்டாத தூரத்தில் விடுதலைப் புலிகளின் அதே இலட்சியத்துடன் புலம்பெயர் தேசத்தில் நாங்கள் தற்போது உங்களுக்குப் பலமாக எழுந்து நிற்கின்றோம், துணிந்து நிற்கின்றோம் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.

தமிழீழத்து மக்கள் இப்போது துப்பாக்கி முனையில் மெளனிக்க வைக்கப்பட்டுள்ளனர். நிர்ப்பந்தச் சிறைகளில் முடங்கிக் கிடக்கின்றனர். ஐந்து தமிழர்களுக்கு ஒரு படையினன் என்ற கணக்கில் சிங்களப் படை வீக்கம் பெற்றுள்ள நிலையில் தமிழர்கள் வாய் திறந்து பேசுவது சாத்தியமே இல்லை. அவர்கள் பேச மாட்டார்கள் என்பதனால், அவர்கள் மீண்டும் அடிமைகளாகி விட்டார்கள், சிங்களத்தின் கொடுமைகளைச் சகிக்கப் பழகிவிட்டார்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது.

நீங்களும் அவர்களது மெளனத்தின் அர்த்தத்தை யாழ் மாநகரசபைத் தேர்தலில் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். அவர்கள் மெளனமாக இருந்தே வாக்களிக்க மறுத்துத் தமது தீர்மானத்தை நன்றாகவே சிங்கள தேசத்திற்கும், உலக நாடுகளுக்கும் ஏன் உங்களுக்கும், எங்களுக்கும் கூட உறைக்க உணர்த்தியுள்ளார்கள். அவர்கள் வாக்களிக்க மறுத்ததன் மூலம் உங்களை நிராகரிக்கவில்லை. தங்களை உரைத்துக் காட்டியுள்ளார்கள். மூவின மக்களால் நிறைக்கப்பட்ட வவுனியாவும் ஒரு தெளிவான முடிவை நமக்கு அறிவித்துத்தான் இருக்கிறார்கள்.

ஆம், தமிழீழ இலட்சியத்திலிருந்து அவர்கள் திரும்பிச் செல்லப்போவதில்லை. அவர்கள் உங்களிடமும், எங்களிடமும், உலக நாடுகளிடமும் அதைத்தான் மீண்டும் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான எமது போராட்டங்களும் இப்போது மீண்டும் புலம்பெயர் தேசங்களில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

மேற்குலகின் பல நாடுகள் சிங்களத்தின் கொடூரங்களை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளன. சிங்கள தேசத்தின் மீதான அவற்றின் கண்டனங்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. தமிழீழத்துக் கரு புலம்பெயர் தமிழர் கருவறையில் மெல்ல வளர ஆரம்பித்து விட்டன. அதைப் பெற்றெடுக்கும் புறச் சூழலும் அகச் சூழலும் நன்றாகவே கனிந்து வருகின்றது.

நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் வவுனியா வதை முகாமிலிருந்து எமது மக்களை விடுவித்தேதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதோ உருவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பொறுப்பை புலம் பெயர் தேசத்து எங்களிடம் விட்டு விடுங்கள்.

சிங்களத்துச் சிறைகளில் வாடும் எம் தமிழ் உறவுகளை இப்படியே விட்டுவிட்டு வாழாதிருக்கமாட்டோம். உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டே, சிங்களத்தின் கொடூரங்களை அம்பலப்படுத்தியபடி அவர்களையும் சிறை மீட்போம். அதனையும் எங்களிடம் விட்டுவிடுங்கள்.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மட்டுமே மெளனிக்க வைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தை மெளனிக்க வைக்கும் உரிமை எங்களுக்கும், உங்களுக்கும் கிடையாது. அது ஈழத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முடிவு. தேர்தல் களத்தில் உங்களுக்கு ஆணை வழங்கிய எமது சொந்தங்கள் அதை மீளப் பெறும்வரை யாராலும் இலட்சியத்தை மாற்றி அமைக்கவோ, அதில் சமரசம் செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது. உங்களுக்கும் எங்களுக்கும் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே மக்கள் வழங்கியுள்ளார்கள்.

சிங்கள தேசத்தின் மீதான எமது மக்களின் அக்கினிப் பார்வையை திசை மாற்ற முயற்சிக்காதீர்கள். அது உங்களையும் சுட்டெரித்துவிடும். புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களின் போராட்டமே உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. எம்மைப் பயங்கரவாதிகளாக அறிவித்தவர்கள் கூட எமது பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார்கள். எமக்காக சிங்கள தேசத்துடன் வாதிட்டார்கள். சிங்கள தேசம் துகில் உரியப்பட்டு, அம்மணமாகக் கூனி நிற்கின்றது. ராஜபக்ஷக்கள் மேற்குலக நாடுகளுக்குப் பயணம் செய்ய அச்சப்பட்டு அத்தனை பயண நிரல்களையும் ரத்தாக்கி விடுகிறார்கள்.

இந்த நிலையில் அந்த அசுரர்களிடம் எதை யாசிக்கச் சென்றீர்கள்? கேட்பதைக் கொடுப்பவன் சிங்களவனானால், தந்தை செல்வா போர்க்களத்தைத் திறந்துவிட்டுச் சென்றிருப்பாரா? போர்க்களத்தில் அத்தனை கொடுமைகளையும் புரிந்த திமிர்கொண்ட சிங்களத் தலைவனிடம் எப்படி ஐயா உங்களால் கைகுலுக்க முடிந்தது? புலிகள் அழிந்து விட்டார்கள் என சிங்கள அரசு திரும்பத் திரும்பச் சொல்வதை நீங்களும் நம்பி விட்டீர்களா? தமிழர்களை மீண்டும் ஒரு முறை விற்றுப் பிழைக்கலாம் என்று நீங்களுமா முடிவு செய்து விட்டீர்கள்?

வேண்டாம் ஐயா! வரலாறு மீண்டும் ஒருமுறை திரும்பி வராது. இது புலிகளின் காலம் என்பதனால் வைத்த குறி தப்பாது! தமிழீழம் நோக்கிய ஈழத் தமிழர்களின் பாதையில் நீங்களும்,நாங்களும் பணியாளர்கள் மட்டுமே. தலைவர்கள் தமிழீழ மக்கள் மட்டுமே. விதியை மாற்ற நீங்கள் முயற்சி செய்யாதீர்கள்! விதி உங்களை மாற்றிவிடும்.

நன்றி: ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*