TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்கள நீதித்துறையின் இனவாதத் தீர்ப்பு!

thisசிறீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள் எங்கே சென்று கொண்டுள்ளார்கள் என்பது புரியவே இல்லை. அதைப் புரிந்து கொண்டதற்கான அடையாளங்களை சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரல்களில் காணக் கூடியதாகவும் இல்லை. இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசியப் படைகள் மேற்கொண்ட யூதப் படுகொலைகளுக்கு இணையான தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி முடித்த சிங்கள அரசு, அதை இப்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் அவர்களுக்கு சிங்கள நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை மூலம், ‘இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ அல்ல, உண்மைகளைப் பதிவு செய்யவும் முடியாது’ என்ற அச்சுறுத்தலை மீண்டும் விடுத்துள்ளது.

சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, சிங்கள நீதித் துறையும் நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் மீது இனவாத வன் கொடுமைகளை நிகழ்த்தி வந்துள்ளது. இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில் தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட சிங்கள இன வன்முறைக் கொடுமைகள் எவையும் சிங்கள நீதித் துறையின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படவும் இல்லை. அதற்குக் காரணமான எவரும் தண்டிக்கப்படவும் இல்லை.

சிங்கள இன மேலாதிக்க வன்முறை காரணமாகவும், அதன் காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டம் காரணமாகவும் சுமார் இரண்டு இலட்சம் தமிழர்கள் தனித் தனியாகவோ, கூட்டாகவோ தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யுத்த களமுனைக்கு அப்பால், சட்டத்திற்குப் புறம்பான கடத்தல்கள், படுகொலைகள், காணாமல் ஆக்குதல், அச்சுறுத்துதல்கள், கப்பம் பெறுதல் ஆகிய அத்தனை குற்றங்களையும் புரிந்தவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள் என்பதாலும், அல்லது சிங்கள அரச படைகளுடன் இணைந்து செயற்படும் தமிழர்கள் என்பதாலும் சிங்களச் சட்டம் அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக, அவர்கள் தொடர்ந்தும் இதனை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இதுவரை எத்தனையோ படுகொலைகள், கடத்தல்களுக்குக் காரணமானவர்கள் தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்ட போதும் அவர்களை சிங்களச் சட்டங்கள் தண்டித்தான சரித்திரம் இலங்கையில் கிடையாது.

தமிழர்கள் என்றால் கொல்லப்பட வேண்டியவர்கள், சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள், சிறைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற சிங்கள இனவாத சித்தாந்தத்தை சிங்கள நீதித்துறை மாற்றி அமைக்க முயன்றது கிடையாது. சிங்கள இனவாதக் கரங்களிலிருந்து தமிழ் ஊடகத் துறையும் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. மகிந்த அதிகாரத்திற்கு வந்த நாள் முதலாக இன்று வரையான ஐந்து வருடகால ஆட்சிக் காலத்தில் இதுவரை நடேசன், சிவராம் உட்பட 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 பேர் தமிழர்கள். சிங்கள தரப்பால் படுகொலை செய்யப்பட்டவர்கள் பட்டியலிலிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் தப்பிவிட முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த காரணத்திற்காக இந்துக் கோவிலில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தேவாலயத்தில் நத்தார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவனேசன் வன்னிக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடாத்தியுள்ளது. இவ்வாறு, தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட படுகொலைகளின் சூத்திரதாரிகள் சிங்கள அரசால் கண்டு பிடிக்கப்படவும் இல்லை. எவரும் சிங்கள நீதித் துறையின் முன்பாக நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படவும் இல்லை.

ஆனால், சிங்கள அரசியல்வாதிகள் மீதோ அல்லது சிங்களப் படை அதிகாரிகள் மீதோ தாக்குதல் நடாத்தப்பட்டால் அதன் ஆதி மூலத்தையும் கண்டு பிடித்து, அவர்கள் எப்படியாவது தண்டனைக்குள்ளாக்கப்பட்டு விடுவார்கள். தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறுவதும், சிங்கள அரச பயங்கரவாதம் பற்றி எழுதுவதும், விமர்சிப்பதும் சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, சிங்கள நீதித் துறைக்கும் சீற்றத்தை ஏற்படுத்தும் என்பதை திசநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை மீண்டும் நிரூபித்துள்ளது.

சிங்கள இனவாதிகளது நீதி நிர்வாகமும் தமிழர்களை தமிழர்கள் என்பதற்காகத் தண்டிக்கும் போக்கையே இது காட்டுகின்றது. சிங்கள அரசின் நீதி நிர்வாகத்தின்மீது ஈழத் தமிழர்கள் நம்பிக்கை இழந்து எவ்வளவோ வருடங்கள் கடந்துவிட்டன.

சிங்கள நீதித்துறை தமிழர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கத் தவறியதனாலேயே தமிழீழ மக்கள் தமக்கான தமது தேசத்தை மீள் நிர்மாணம் செய்யும் தீர்மானத்தை எடுத்தார்கள். அதில் தற்போதும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இனிமேலும் நிகழப் போவதில்லை என்பதையே இந்தத் தீர்ப்பு உணர்த்துகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*