TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்

hm‘த பியானிஸ்ட்’ சமகால வலியின் நிழல்:

ம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்’

யூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு நட்சத்திரக் குறியிட்ட கைப்பட்டை ஒன்றை அணியவேண்டும் என்று ஜேர்மானிய ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அதற்குப் பணியாதவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. அடையாள அட்டை இல்லாத தமிழர்கள் வீதிகளில் இறங்கவே அச்சப்படுவதை அது நினைவூட்டியது. அது எங்களில் ஒரு அங்கம்போல, ஆடைபோல கூடவே இருந்தது. மறுவளமாக, தமிழர்கள் என்று இனம்பிரித்துக் காட்டவும் கைதுசெய்யவும் அது பேரினவாதப் படைகளுக்கு உதவியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அஞ்சிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் அணிந்துகொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜேர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் யூதர்கள் அனைவரும் பெயர்ந்துசென்றுவிடவேண்டும் என்று மேலும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?)

“வார்சாவில் நாங்கள் நான்கு இலட்சம் யூதர்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்குள் எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் இங்கேயே தங்கிவிடலாம்.”என்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. இந்த நான்கு இலட்சம் என்ற எண்ணிக்கையை நாம் எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆம். வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களாலும் எண்ணிக்கைகளாலுமே வனையப்பட்டிருக்கிறது.

இதனிடையில் ஷ்பில்மானின் பிரியத்திற்குரிய பியானோவையும் விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சொற்ப உடமைகளுடனும் சோர்ந்த முகத்துடனும் அவர்கள் சாரிசாரியாகப் பெயர்ந்துசெல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போகிறார்கள். முதியவர்களை சக்கரநாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். 1995இல் ‘ரிவிரச’இராணுவ நடவடிக்கையின்போது பெயர்ந்துசென்ற மக்களையும், 2009இல் பதறிய முகங்களோடு உயிரொன்றே மிச்சமாக வவுனியாவுக்குப் பெயர்க்கப்பட்டவர்களையும் நினைவூட்டியது அக்காட்சி. தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அவர்களது விசும்பல் அவ்விடத்தை நிறைக்கிறது. ஷ்பில்மானும் அவனது குடும்பமும் அந்தக் கூட்டத்தில் நடந்துபோகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அந்த செலோ வாத்தியக்காரியை ஷ்பில்மான் காண்கிறான். “இது நீதியில்லை”என்கிறாள் அவள்.

அனைத்து யூதர்களையும் ஓரிடத்தில் குவித்தான பிறகு அந்த இடத்தை மறித்து சுவர் எழுப்புகிறது நாஜிப்படை. இப்போது போலந்து இரண்டுபட்டுவிட்டது. யூதர்கள் – யூதர்கள் அல்லாதவர். இப்போது ஜேர்மானியர்களோடு சேர்ந்து வறுமையும் அவர்களை வதைக்கிறது. பிழைப்பதற்கு வழியில்லை. வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவனைக் கண்டீர்களா என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் கேட்டபடியிருக்கிறாள். அவள் மனம் பிறழ்ந்துபோயிருக்கிறாள். பசியில் விழுந்து இறந்தவர்களின் பிணங்கள் தெருக்களெங்ஙணும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த ஜனங்கள் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள். இங்கே ‘யூதர்கள்’என்று வருமிடங்களில் ‘தமிழர்கள்’என்று பிரதியீடு செய்தும் வாசிக்கலாம். நொந்து நோய்மைப்பட்ட அந்த ஜனங்களை நடனமாடும்படி பணிக்கிறார்கள் ஜேர்மானியச் சிப்பாய்கள். கண்களில் அடக்கப்பட்ட கோபம் ஒளிந்திருக்க அவர்கள் ஆடுகிறார்கள்.

கைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிலும் இல்லாமல் இல்லை. ஆட்சியாளர்களுடன் கூடிக் குலவும் ஒருவன் ஷ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமானவனாக இருக்கிறான். “நீங்களும் என்னைப்போல ஜேர்மானியர்களிடம் பணியில் அமருங்கள்”என்கிறான். “நீ பொலிஸ் ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோ வாசிக்கலாம்”என்று சகோதரர்களுக்கு ஆசை காட்டுகிறான். ஷ்பில்மானும் சகோதரன் ஹென்ரிக்கும் மறுத்துவிடுகிறார்கள். அவன் வன்மத்தோடு வெளியேறிச் செல்கிறான். வன்மத்தோடு வெளியேறிச் செல்பவனில் நீங்கள் யார் யாரைக் காண்கிறீர்கள் நண்பர்களே?

இதனிடையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட சில இளைஞர்கள் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளும்படி ஷ்பில்மான் கேட்கிறான். “நீ அறியப்பட்ட இசைக்கலைஞன். உலகத்திற்கே உன்னைத் தெரியும். உனக்குப் புரட்சி ஒத்துவராது”என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.

படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘வரலாறு ஓ இந்த வரலாறு!’ என்று நினைத்துக்கொள்ளும்படியாக அத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன ஒடுக்குமுறைகளுள், இனவழிப்பில்.

“நாங்கள் இங்கே அடிமைகளாகச் செத்துமடிந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலிருக்கும் யூதர்கள் எங்களுக்காக என்ன செய்தார்கள்? ஜேர்மனி மீது படையெடுக்கும்படி அங்குள்ள யூதர்கள் அமெரிக்காவைத் தூண்டவேண்டும்”என்று ஷ்பில்மானின் தந்தை ஓரிடத்தில் ஆதங்கம் பொங்கச் சொல்வார்.

‘நீங்கள் எழுதிய வார்த்தைகளை யாரோ உங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார்கள்’என்ற கவிதை நினைவுக்கு வருகிறதா? ஒரே சாயலுடைய வார்த்தைகளை வரலாறு செவிமடுத்தபடியே இருக்கிறது. எனக்கு தமிழகத்தின் நினைவு வந்தது. ஆறரைக் கோடித் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசை இலங்கை அரசுக்கெதிராக சுண்டுவிரலசைக்க வைக்கக்கூட முடியவில்லை. அதற்கு ஆறரைக் கோடித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அரசின் அசமந்தப் போக்கும், அவலங்கள் மீதான பாராமுகமும், அதிகாரத்தோடான சமரசங்களும்தானேயன்றி வேறு காரணங்கள் இருக்கமுடியாது. 1940ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட அறுபத்தொன்பது ஆண்டுகளில் மனிதநாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறதென்று யாராவது சொல்வரெனில் அது மனதறிந்த பொய்யாகவே இருக்கமுடியும். காலந்தோறும் அறம் செத்துச் செத்துச் சீவித்துக்கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தில், நிறத்தில் மட்டுமே வேறுபட்டிருக்கிறார்கள். அவர்களது குரூரமும், பிறவதையில் களிக்கும் மனமும் ஒன்றேதான். பெயர்க்கப்பட்டு வேறொரு இடத்தில் தனித்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களை நோக்கி நீள்கிறது ஆக்கிரமிப்பாளர்களின் கூரிய நகங்கள். இதை வாசிக்கும் பலருக்கு அந்த இருளிலும் இருளான கொடிய இரவுகள் நினைவில் வந்து எலும்புக்குருத்துக்களைச் சில்லிட வைக்கலாம். நாய்களும் அச்சத்தில் மௌனித்திருக்கும் வீதிகளில் இராணுவ வண்டிகள் கிரீச்சிட்டபடி வந்து நிற்கும். விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் சுவாசிக்கும் ஒலி எங்களுக்கே பேரதிர்வாய் கேட்க உயிர் உறைந்து மரணத்தின் காலடி நெருங்குவதைக் கேட்டிருப்போம். தடதடவென கதவுகள் நடுங்க அறைந்து பிறழ்ந்த தமிழிலோ சிங்களத்திலோ கூப்பிடுவார்கள். சிலரைத் தேர்ந்தெடுத்து பிடரியில் அறைந்து வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அல்லது வண்டிகளை ஏற்றிக்கொல்வார்கள்.

‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து எறிந்துகொல்கிறார்கள். பிடித்துக்கொண்டு போனவர்களை கட்டிடத்தின் கீழேயே வைத்துச் சுட்டுக்கொல்கிறார்கள். பிடிவிலக்கித் தப்பியோடியவனின் தலையில் பாய்கிறது சன்னம். இராணுவ வாகனங்கள் நகரும்வரை, வெடித்தெழும் கண்ணீரையும் கதறலையும் நெஞ்சடக்கிக் காத்திருக்கிறார்கள் பெண்கள்.

ஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை பொலிஸ் கைதுசெய்துகொண்டு போகிறது. தனது சகோதரனை விட்டுவிடும்படி ஏற்கெனவே பரிச்சயமான அந்த யூதப் பொலிஸ்காரனை மன்றாடுகிறான் ஷ்பில்மான். வழக்கமான பதிலை அவன் சொல்கிறான். “ஹென்ரிக்கை நான் காணவில்லை” இதே பதிலை ஈழத்தில் இராணுவ முகாம்களின் வாசல்களிலும் பொலிஸ் நிலையங்கள் முன்பும் காலையிலிருந்து இரவு வரை தவம்கிடக்கும் தாய்மார் அடிக்கடி கேட்க விதிக்கப்பட்டவர்கள். ஜேர்மானியர்களை நத்திப் பிழைக்கும் அந்த யூதப் பொலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலை செய்கிறான். அந்தப் பொலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனது இசைத்திறமையினாலோ எதனாலோ வெளிக்காட்டப்படாத அபிமானம் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நெஞ்சை உருக்கும் சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. சிங்கள இராணுவத்தினர் எறியும் உணவுப் பொட்டலங்களுக்காக கூட்டத்தில் இடிபட்டபடி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் புகைப்படங்கள் நினைவுக்கு வந்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. பிறகு… பிறகென்ன… நீங்கள் நினைப்பதுதான். ‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதிய பெண் தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வாள். அதைத் தெருவாசியொருவன் தட்டிப்பறிக்கப் பார்ப்பான். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்திவிடும். நிலத்தில் சிந்திய உணவை அந்த மனிதன் மிருகத்தைப்போல படுத்து நாக்கினால் வழித்துச் சாப்பிடுவான். அந்தப் பெண் திகைப்பும் ஆற்றாமையும் பொங்க அவனை அடித்து அடித்து அழுவாள். அவனோ அடியைப் பொருட்படுத்தாமல் ஒரு துளியும் விடாமல் உண்பதிலேயே கவனமாக இருப்பான். பசி மனிதர்களை மிருகங்களிலும் கீழாகச் சபித்துவிடுகிறது.

1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி.

யூதர்களில் பெரும்பாலானோரை புகைவண்டிகளில் ஏற்றி கண்காணாதோர் இடத்திற்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் ஜேர்மானியப்படையினர்.

“எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?”என்றொரு பெண் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து ஒரேயொரு சூடு. அதுதான் அவளுக்கான பதில்.

புகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”ஒரு பெண் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

“எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.

வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.

இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.

இதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்கமுடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.

“எங்களை எங்கே கொண்டு போகிறார்கள்?”முதியவர்கள் தங்களுக்குள் விசனத்தோடு கிசுகிசுக்கிறார்கள்.

“கடூழியத்திற்காக நாம் கொண்டுசெல்லப்படுகிறோம்”

“அங்கவீனர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்?”

மௌனம் மரணத்தைக் கட்டியம் கூறுகிறது.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண் கத்தியழுகிறாள்.

“அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்?”ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள்.

“வெளியேறும்படி ஜேர்மானியர்கள் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென்று அவள் நினைத்தாள். ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்கமுயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சடங்கிச் செத்துப்போயிற்று.”

“நான் ஏன் அப்படிச் செய்தேன்…
நான் ஏன் அப்படிச் செய்தேன்…?”

புகையிரதம் மரணவண்டியென வந்து நிற்கிறது. அவர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல இழுத்தெறியப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு புகையிரதத்தினுள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து பிரித்து வெளியில் எறிகிறது. அந்த யூதப் பொலிஸ்காரனுடைய கைதான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை, சகோதரர்களை விளித்துக் கூவியழுகிறான். அவர்களை நோக்கி ஓட முயல்கிறான். பொலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.

“முட்டாளே! நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஓடு”

விடை கிடைத்துவிட்டது.

புகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்துசெல்கிறான் ஷ்பில்மான். அவனது வீடு சூறையாடப்பட்டிருக்கிறது.

அதன்பிறகான அவனது நாட்கள் உயிர்தரித்திருப்பதற்கான எத்தனத்தில் கழிகின்றன. கடூழிய காலத்தில் சில புரட்சியாளர்களின் தொடர்பு அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஆயுதங்களை ஒளித்துவைக்க அவன் உதவிசெய்கிறான். கடூழியத்திலிருந்து தப்பித்து பாடகி ஒருத்தியின் உதவியால்- பூட்டப்பட்ட வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருக்கிறான்.

ஒருநாள் ஜேர்மானியர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சண்டை நடக்கிறது. ஈற்றில் கிளர்ச்சியாளர்களை ஜேர்மானியர்கள் அடக்குகிறார்கள். எஞ்சியவர்களைச் சுட்டுக்கொல்கிறார்கள். அடைபட்டிருக்கும் வீட்டிலிருந்து அத்தனைக்கும் மௌனசாட்சியாகிறான் அந்த இசைக்கலைஞன். அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பீங்கான்கள் விழுந்து நொருங்கும் ஓசை அவனது ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அசூசையும் ஆத்திரமும் பொங்க ‘யூதன்… யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்… பிடியுங்கள்’என்று கத்துகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபத்தான காலங்களில் தொடர்புகொள்ளும்படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் பெண்ணினுடையதாக – செலோ வாத்தியக்காரியினுடையதாக இருக்கக் காண்கிறான். காதல் மலர் கண்ணெதிரில் உதிர்கிறது. அவள் இப்போது வேறொருவனின் மனைவி.

அவளும் அவளது கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் ஒளித்துவைக்கிறார்கள். எப்போதாவது உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் கணத்தில் அவனது உயிர் பிரிந்துவிடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் மஞ்சள்காமாலையில் விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவளும் கையசைத்து வேறிடம் போகிறாள். இதனிடையில் அவனுக்கு எப்போதாவது உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துபோகிறான். அவன் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கிறான் நோயோடும், பசியோடும், நம்பிக்கையோடும்.

புரட்சியாளர்களுக்கும் ஜேர்மானியப் படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழும்பி ஓடுகிறான். பார்த்துக்கொண்டிருப்பவர்களை மரணபயம் தொற்றிக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு அது. இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டிருக்கிறான். தோற்றமும் நடத்தையும் மாறிவிட்டிருக்கின்றன.

மறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள் ஜேர்மானியர்கள். உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது? பதுங்குகுழியினுள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டவர்களா? ஒன்றாகக் குவித்து எரிக்கப்பட்டவர்களா?

அவ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி நடந்துபோகிறான் அந்த இசைக்கலைஞன். அந்தக் காட்சி மனதில் எப்போதும் அழிக்கமுடியாத சித்திரமாகப் பதிந்திருக்கும். வைத்தியசாலை போல தோற்றமளிக்கும் ஒரு கட்டிடத்தினுள் ஒளிந்துகொள்ள வாகாக இடம்தேடுகிறான். பசியும் தாகமும் அவனைச் சிதைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது சித்தம்பிறழ்ந்த தன்னுடைய மனப்பிரமை என்றே அவன் எண்ணுகிறான். கைக்கு அகப்பட்ட ஒரேயொரு திரவ உணவு டின்னை உடைக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச்சென்று எவருடையவோ காலடியில் முட்டிநிற்கிறது.

ஜேர்மானிய அதிகாரி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். முடிந்தது! இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக்கொண்டிருந்த உயிர் இதோ பறந்துவிடப்போகிறது என்றெண்ணுகிறான். இனி ஓடச் சக்தியில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான்.

“நீ யார்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”

“………….”

“யூதனா? இங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாயா?”

“ஆம். நான் ஒரு பியானோ வாத்தியக்காரன்”

அந்த ஜேர்மானிய அதிகாரி அழைத்துச்சென்ற இடத்தில் ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி பணிக்கிறான். உண்மையிலும் உண்மையாகவே ஒரு பியானோ! பசித்திருந்த, தாகித்திருந்த விரல்களுக்கும் ஆன்மாவுக்கும் உணவு. அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் கசியவாரம்பிக்கிறது. பிறகு பேராழியின் ஆழம், புயலின் சீற்றம், ஆகாயத்தின் நீலம், நெருப்பின் பெருநடனம். பேருன்னதமான உலகொன்றினுள் அவன் விரல்கள் வழியாகப் பிரவேசிக்கிறான். ஜேர்மானியன் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறான்.

“அங்கே என்ன சத்தம்?”வாசித்து முடிந்ததும் ஷ்பில்மான் கேட்கிறான்.

“ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கிவந்துவிட்டார்கள். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும்”

அந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவுகொண்டு வந்துகொடுக்கிறான். கிளம்புகையில் ஏதோ நினைத்துக்கொண்டவனாக தனது கோட்டைக் கழற்றிக்கொடுக்கிறான். ‘போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்?’என்று கேட்கிறான். ‘நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன்’என்கிறான் ஷ்பில்மான் கண்கள் மினுங்க. ‘உனது பெயர் என்ன? நான் உனக்காக அந்த வானொலியைக் கேட்பேன்’என்றுகூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி.

“நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை?”கலங்குகிறான் ஷ்பில்மான்.

“கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான்”

கடைசியில் நமக்கு வாராத, வாய்க்காத அந்த நாள் அவனை வந்தடைகிறது. ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் பேருவகையோடு நடந்துபோகிறான். பியானோ இசை பின்னணியில் ஒலிக்கிறது.

காட்சி மாறுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்கள் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலையான போலந்தியர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள்.

“கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்”

அதிலொருவன் கோபத்தோடு விம்முகிறான்.

“நான் ஒரு இசைக்கலைஞன். எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் வயலினைப் பறித்துக்கொண்டீர்கள். என் ஆன்மாவை…”

சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்களிலிருந்து ஒருவன்-அந்தக் கருணையுள்ள அதிகாரி எழுந்து வருகிறான். ‘நீ ஒரு இசைக்கலைஞனா? உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா? பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்தபோது அவனுக்கு உணவுகொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா’ அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான். ஜேர்மானியனை இழுத்து அமர்த்துகிறார்கள் ரஷ்யர்கள்.

மறுபடியும் அதே வானொலி நிலையத்தில் பியானோ முன்னமர்ந்திருக்கிறான் ஷ்பில்மான். அவன் விரல்கள் வழியாக அழுதுகொண்டிருக்கிறான். தாயை, தந்தையை, சகோதரர்களை, மலர்ந்து உதிர்ந்த காதலை, இருப்பிற்காக நெருப்பில் நடந்த நாட்களை, கொல்லப்பட்ட தனது மக்களை நினைத்து உருகுகிறான். அந்நேரம் அவன் முகம்தான் எத்தனை வேதனையில் வெடித்துக்கொண்டிருந்தது!

“இதோ இடத்தில்தான் அவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இதோ இங்கேதான் அந்த ஜேர்மானியன் அமர்ந்திருந்தான். உன்னைக் கேட்டான்”புல்தரையைக் காட்டுகிறான் நண்பன் பிறகொருநாள்.

பெருமூச்செறிகிறான் ஷ்பில்மான். பியானோ அமைதியின் ஆழத்திலிருந்து எழுந்து பொழிகிறது. மேலும் பொழிகிறது. பொழிகிறது.

‘தனது 88ஆவது வயதில் இறக்கும்வரை ஷ்பில்மான் வார்சோவில் வாழ்ந்திருந்தார்’என்ற வரிகள் திரையில் மேலுயர்ந்துசெல்கின்றன.

‘ரஷ்யப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த ஜேர்மன் அதிகாரி 1953ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே மடிந்துபோனான்’ என்ற தகவலும்.

இப்போது பியானோ அதன் பாரத்தோடு நம்மேல் இறங்கியிருக்கிறது. அந்த இசையின் துயர் நமக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் குரூரம் நம்மை ஏங்கியழ வைக்கிறது. அவலப்பட்டவர்களின் கண்ணீர் நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்குகிறது.

நினைத்துப் பார்த்தேன். இவ்வளவும் நடந்தது ஏறத்தாழ 64 ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு மனித ஆயுளிலும் குறைவான காலப்பகுதிக்கு முன்னர்தான். மானுடகுலத்தின் விரோதியெனப்பட்ட ஹிட்லர் பிறந்த ஜேர்மனி அமைதியாகிவிட்டது. மீட்பனாகத் திகழ்ந்த ரஷ்யா துண்டுதுண்டாகச் சிதறிவிட்டது. அறுபது இலட்சம் பேரை இனவெறிக்குத் தின்னக்கொடுத்த யூதர்கள் அதன்பிறகும் உயிர்த்திருந்தார்கள். அதட்டல்களையும் மிரட்டல்களையும் மீறி அவர்களுக்கென்றொரு நாட்டைப் பிறப்பித்தார்கள். ஈழத்தில் முப்பத்தைந்தாண்டு காலப் போராட்டம் பேரினவாதத்தாலும் அதன் பின்பல நாடுகளாலும் பிடுங்கியெறியப்பட்டுவிட்டது. மிருகங்களை அடைத்துவைப்பதைப் போல, வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் தடுப்புமுகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப்படைகளை நினைவூட்டும் இராணுவத்தினர் முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலியிட்டு கண்துஞ்சாது காவல்புரிகின்றனர். நோய், பட்டினி, மனவழுத்தம், காணாமல் போதல் இன்னபிற காரணங்களால் அகதிமுகாம்களிலிருந்து

வாரத்திற்கு 1,400 பேர் இறந்தும் மறைந்தும் போவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மூன்று இலட்சம் மக்களுக்குள் வைத்தியர்கள், சட்டம் படித்தவர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், மாணவர்கள், கவிஞர்கள், பொறியியலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள் உள்ளடங்குவர். மெதுவாக மிக மெதுவாக திட்டமிட்டு மூன்று இலட்சம் பேரையும் பேரினவாதிகள் காலிசெய்வதற்கு முன் நாம் கண்விழிக்காதிருந்தால், மரணக்குழிக்குள் புதைப்பதற்குமுன் நாம் அதற்கெதிராகக் குரலெழுப்பாதிருந்தால், நமது கதையைச் சொல்ல, எழுத, ‘த பியானிஸ்ட்’போல படமெடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.

நினைவிருக்கட்டும். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.

வவுனியாவிலுள்ள தடுப்புமுகாம்களைப் பற்றி இவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல்: இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதைமுகாம்களைப் போன்ற மரணமுகாம்களாக இருக்கின்றன. இன்று நாம் இலங்கையில் பார்ப்பதும் இன அழிப்பே. இதை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன: வவுனியாவில் தமிழ்மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை.

புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் மனமேந்திர: இடி அமீன் மற்றும் பொல்போட் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் காலத்தில் கூட இவ்வாறான இடம்பெயர் முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகத்திற்குரியது.

மனித உரிமைக் கண்காணிப்பகம்: அப்பாவிப் பொதுமக்களை அகதிமுகாம்களில் தொடர்ச்சியாக அடைத்துவைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார: மனிதர்களை மிருகங்களாக நடத்தாது, மனிதர்களாக மதித்து வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க: நம்பிவந்த தமிழ்மக்களை அரசாங்கம் பழிவாங்குகிறது. நம்பிவந்த மக்களை அரசாங்கம் மிருகங்களைப் போல நடத்துகிறது.

மனித உரிமைகள் பணியாளரான நிமால்கா பெர்னாண்டோ: போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றார்கள்.

மேலே கருத்துச் சொல்லியிருப்பவர்கள் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களும், மேற்குலகைச்சேர்ந்தவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2009
பிந்திய செய்திகள்
இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை: இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!
பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன்: ஒட்டுமொத்த வடக்கு கிழக்கை சிங்கள பெளத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை
வி.உருத்திரகுமாரன்: தமிழர் படுகொலை காணொலி தொடர்பாக ஐ.நா., குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்:
சிறிலங்கா: அம்பலத்துக்கு வந்திருக்கும் அரச படைகளின் படுகொலைகள்
பேரசிரியர் பி.இராமசாமி குற்றச்சாட்டு: ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்தியா

பிந்திய கட்டுரைகள்
பலித கோஹனாவின் ஒப்புதல் வாக்குமூலம்!: “விடுதலைப் புலிகளை சுற்றி வளைக்கவே பாதுக்காப்பு வலயங்களை (No Fire Zone) உருவாக்கினோம். (காணொளி)
அழியாச்சுடர் கேணல் ராயு: ஏழாம் ஆண்டு நினைவுநாள்.
போரியல் அறிவாளன், கேணல் ராயு: மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி
தட்டிக் கேட்பார் யாரும் இல்லை அழிக்கப்படும் ஈழத்தமிழினமும் அமைதிகாக்கும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமும்?
புறப்படுங்கள் விடுதலைக்காய்………: இன்றைய வரலாற்றுக் கடமை தோல்வியில் இருந்து மீண்டெழுதல்

பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
தமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும்
இந்தியா: புலிகள் அழிப்பின் பின்னணியில் ஈழத் தமிழினத்துக்குக் கூறப்போகும் விடை என்ன?
தினக்குரல்: இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்து….
உதயன்: அனைத்துக் கட்சிக் குழுவின் சேவை ந(ய/கை)ப்பு
தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்!: ‘எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்ற வாசகம் இன்று பொய்த்துப் போயுள்ளது.

பிந்திய அறிக்கைகள்
அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை: பத்மநாதனை நீதிமன்றத்தில் முன்னிறுத்துங்கள்
மனித உரிமைகள் காப்பகம் குற்றச்சாட்டு: தமிழ்மக்களை கூட்டுக்குள் அடைத்து வைத்து கொடுமை புரியும் சிறீலங்கா
உலகத்தமிழ் அமைப்புகளுக்கு உருத்திரகுமாரன் வேண்டுகோள்: நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவு செய்ய முன்வாருங்கள்
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்: பத்மநாதனை கைது செய்ததன் மூலம் இனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வரலாற்று வாய்ப்பை மகிந்த இழந்துவிட்டார்:
பத்மநாதன் கடத்தலுக்கு: தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*