TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத் தமிழர்களுக்கு நிலையான தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்: கனிமொழி


ஈழத் தமிழர்களுக்கு நிலையான தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மேல் சபையில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்துவிட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை.

ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடியமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்றார் அவர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன் உரையாற்றுகையில்,

சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியா செய்துகொண்ட கச்சதீவு உடன்படிக்கையை இரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தங்கள் கட்சி தலைவர் முறையிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தென்னிந்தியாவில் உள்ள மீனவ சமூகத்தினரின் துயர் துடைக்கும் வகையில் கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உரையாற்றுகையில்,

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் படுகொலை செய்யப்படுவதாகவும் இதனை தடுத்து நிறுத்தும்படி நட்பு நாட்டிடம் வலியுறுத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தீர்வு, போதுமான சம உரிமை, மதிப்பு உள்ளிட்டவற்றை வழங்க கோரி அனைத்துலக நாடுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றுகையில்,

“பெரியவர்தம் நோய் போல் பிறர் நோய் கண்டுள்ளம்” என்று தொடங்கும் ‘நன்னெறி’ பாடலை மேற்கோள் காட்டினார்.

இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலையும், குழந்தைகள் பசியால் தவிப்பதையும் பார்த்துக்கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதோடு, இரத்தம் கொதிப்பதாகவும் கூறினார்.

உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் கண்களில் கண்ணீர் வடிகிறது. இதேபோல் உலகில் எந்த பகுதியில் நமது சக மனிதர்கள் அவதிப்பட்டாலும் அவர்களை பார்க்கும் போது நமது கண்களிலும் கண்ணீர் மல்கும் என்ற நன்னெறி வாக்கினை அப்போது அவர் மேற்கோள் காட்டினார். ‘பெரியவர்தம்’ என்று தொடங்கும் அந்த பாடலை அவர் இந்தியில் எழுதி வைத்து படித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*