TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது மாணவன் கத்திக்குத்து

Jaffna Universityயாழ்.பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் வருகை விரிவுரையாளரும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகரும் இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என்.சிவராஜா நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

அலுவலகப் பணியில் சக விரிவுரையாளர்களுடன் தமது அறையில் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, அங்குவந்த மருத்துவபீட மாணவன் ஒருவன் அவரைக் குத்திவிட்டுத்தப்பி விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக யாழ். மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கலாநிதி சிவராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.

அவரது வயிற்றுப்பகுதி, கை, வாய் பகுதி ஆகியவற்றில் மூன்று குத்துக் காயங்கள் காணப்பட்டன என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது வயிற்றுப்பகுதிக் காயம் ஆழமானது என்று கூறப்பட்டது.

நீண்டகாலமாக சமூக மருத்துவத்துறையில் விரிவுரையாளராகவும் பகுதித் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற கலாநிதி சிவராஜா உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராகவும் யாழ். மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் மீதான தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*