TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இராணுவ நடவடிக்கைகளால் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்த மக்கள் தற்போது பெய்யும் கடும் மழையால் தொற்று நோய்களுக்குள்ளாகும் அவலம் நிலை

Vanniiவன்னியில் இராணுவ நடவடிக்கைகளால் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்து வந்த மக்கள் தற்போது வவுனியாவில் பெய்யும் கடும் மழையால் தொற்று நோய்களுக்குள்ளாகும் அவல நிலையேற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளத்தில் பெய்துவரும் மழை காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து சிவசக்தி ஆனந்தன், சிறிலங்காவின் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களைக் கொண்டு வந்துள்ளார்.

அந்த விடயங்கள் வருமாறு;

சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை அவர்களது வாழ்க்கையை மோசமாகப் பாதித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் பல்வேறு வயது மட்டத்தில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். இப்பொழுது பெய்து வரும் மழை காரணமாக அவர்கள் மழை காரணமாக சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு ஈரநிலத்தில் இருந்தே பால் கொடுக்கின்றனர்.

சிறிய குழந்தைகளை வைத்திருப்போர் குழந்தைகளை நிலத்தில் படுக்க வைக்க முடியாமல் அல்லற்படுகின்றனர். பிஞ்சுக் குழந்தைகள் விபரீதம் விளங்காமல் ஓடி விளையாடி சேற்றில் சறுக்கி விழுகின்றனர். முகாம்களின் நிலங்களில் கால்கள் புதைகின்றன. சிறுவர்களைத் தூக்கி எடுப்பதே பெரும்பாடாகிவிடுகின்றது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளைக் கண்காணிப்பதா அல்லது தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதா என்பதே பெரும் பிரச்சினையாகவுள்ளது.

தற்பொழுது மொத்தம் 70 ஆயிரம் மாணவர்கள் முகாம்களில் உள்ளனர். இவர்களில் 1,187 மாணவர்கள் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர். இவர்களின் நிலையை விபரிக்கவே முடியாது. அவர்கள் தங்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்துவார்களா? அல்லது தங்களது புத்தகங்களை மழையில் நனையாமல் பாதுகாப்பார்களா? தங்களது உடை மற்றும் அடையாள அட்டை போன்ற ஆவணங்களைப் பாதுகாப்பதே அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாகவுள்ள நிலையில், அவர்கள் எங்கே பரீட்சைக்குத் தயாராவது?

இதே சூழலில் தான் எதிர்வரும் 23.08.2009 அன்று பத்து வயதை எட்டிய 6 ஆயிரம் மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை எழுதப்போகின்றனர். காயமுற்றிருப்பவர்கள் மற்றும் நோயாளர்களின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நகரவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் காயங்களுடன் அல்லற்படுகின்றனர்.

இம்மழைக்கு சிறு குழந்தைகளும் முதியோர்களும் பலியாகியுள்ளனர். வயோதிபர்கள் இதுவரை வெயிலின் கொடுமைக்கு உள்ளாகினர். இப்பொழுது மழையின் குளிரை எதிர்கொள்கின்றனர். இம்மக்களுக்கு எப்பொழுது விடிவுகிட்டப் போகின்றது?

ஏற்கனவே முகாம்களில் சுகாதாரப் பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்ற நிலையில், சமீபத்திய மழை இப்பிரச்சினையை மேலும் அதிகமாக்கியுள்ளது. மலசலகூடங்கள் நிரம்பி வழிவதால் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர். தொற்றுநோய் விரைவாகப் பரவும் அபாயம் தோன்றியுள்ளது.

தற்பொழுது இம்மக்கள் சமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. குழந்தைகளுக்குப் பால் மா கரைப்பதற்கும் நோயாளர்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கும் சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்கக்கூட முடியாத நிலை தோன்றியுள்ளது. ஏற்கனவே மாற்றுடுப்பின்றி அல்லற்படும் இம்மக்கள் தற்பொழுது மழையில் நனைந்த உடுப்புடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் இம்மக்கள் மிகவும் அத்தியாவசியத் தேவையான உணவு,உடை, தங்குமிடம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அல்லற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*