TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ருசியா, சீனா, கியூபா, பொலிவியா ஆகிய நாடுகளை முன்னிறுத்திய கேள்வி

Vann“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்ட ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் தேவையற்றது. “மே. 26-ல் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே (மலையாளி) எதிர்ப்புத் தெரிவித்தார்.

இலங்கை இனப்படு கொலைக்கு ஆதரவாய், இன அழிப்புக்கு பலியாகி வரும் தமிழருக்கு எதிராய் இந்தியா கொடிதூக்கியிருப்பது இது முதன்முறையல்ல; ஐயாயிரம் தமிழர்களுக்கு மேல் கொன்று வீசப்பட்ட 1983-ஜூலை கலவரத்தின் பேரில் இதேபோல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் விவாதம் வந்தபோது உறுப்பினர் நாடுகள் பலரும் கண்டித்துப் பேசினார்கள்.

இந்தியப் பிரதிநிதி சையத் மசூது என்பவர் இனப்படுகொலையை ஆதரித்துப் பேசினார். “ஆனால் இந்தியக் குரல் மட்டும், இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது” என வித்தியாசமாய் ஒலித்தது”. – இந்து நாளிதழ்

23-08-1983 இலங்கை அரச பயங்கரவாதத்தைத் தத்தெடுத்திருக்கும் இந்தியா- இவ்வாறு நடந்துகொள்வதில் வியப்பில்லை. இந்தியத் துணைக் கண்டத்துக்குள் அடக்கியாளப்பட்டிருக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் உள்ளும் புறமும் தெளிவாக அறிந்தவராதலால் இந்தக் கணிப்புக்கே வருவார். ருசியா, சீனா, போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தன என்பதில் எவருக்கும் வியப்பு எழ நியாயமில்லை.

ஐம்பது ஆண்டுகளின் முன் 1950-களில் இக்கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் ஆச்சரியம் கொள்ள நியாயம் இருந்திருக்கும். “சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” என்றதொரு நீண்ட கால வாசகம் உண்டு. கேள்விக்குட்படுத்தக்கூடாத அரச விசுவாசத்தை இது வெளிப்படுத்துகிறது. சீசருடைய மனைவி மட்டுமல்ல. சீசரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரல்ல. நம் தோள்கள் மீது அமர்ந்த அரசர்கள், அரச குடும்பத்தினர் நம் வழிபாட்டுக்குரியவர்கள், அவர்களுடைய எந்தச் செயலும் கேள்வி எழுப்பக் கூடாதது என்று நமக்குள் இறக்கப்பட்டிருக்கம் நம்பிக்கை வாதத்தின் நீட்சிதான்.

“தலைவன் மீது நம்பிக்கை வை” என்ற நிலைப்பாடு. இலட்சிய வழிகாட்டிகளான தலைவர்கள் மீதும், நாடுகள் மீதும் எல்லாம் சரியாகவே நடத்துவார்கள் என்ற ஆராய்ச்சியற்ற பார்வை நம் தோள்களை மட்டுமல்ல; தலையையும் ஆக்கிரமித்திருக்கிறது. மாவோ இருக்கிற காலத்திலேயே திபெத்-சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. மன்னர்களின் முன்னொரு ஆட்சியின் போது, சீனாவின் எல்லைக்குள் திபெத் இருந்தது என்பதற்காக தனி தேசிய இனம் என்ற சிறப்பு அடையாளத்தை அழித்து, மாவோவின் இசைவோடு அபகரிக்கப்பட்டது.

சோவியத் புரட்சிக்குப்பின், ருசியப் பெருந்தேசிய இனத்தின் ஆதிக்கம். சோவியத் ஒன்றியத்துக்குட்பட்ட பிற தேசிய இனங்கள் மீது குவிவதை லெனின் கண்டார். ஸ்டாலினிடம் வெளிப்பட்ட பெருந்தேசிய இன ஆதிக்கம் என்ற இந்த ஒரு பக்கவாத நோயை – லெனின் கடுமையாக விமரிசினத்துக்குட்படுத்தினார். எதன் மீதும், எவர் மீதும், விமர்சனம் கூடாது என்ற சார்பு முறையை, லெனின் உடைத்திருக்கிறார். எதன் மீதும், எவர்மீதும் விமர்சனம் என்ற பார்வை வரலாற்றைக் கட்டமைக்க அடிப்படை.

வரலாற்றில் நாம் வகிக்க வேண்டிய பாத்திரத்தை இது உறுதி செய்யும். காரண, காரிய பொருத்தமுள்ள கேள்விகள், விளக்கம் சரியாக அமைகிற போது, நடைமுறைக்குக் கொண்டு போதல்; நடைமுறையினூடாகவும், அனுபவத்தின் வழியாகவும் கால, இட, சூழல் மாற்றங்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்க பதில் தரப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். சீனம்-மக்கள் சீனம் அல்ல. சீனா எழுபதுகளிலிருந்தே வல்லரசாகத் தோற்றம் கொள்ளத் தொடங்கி பாதை மாறி வெகுகாலம் ஆகிவிட்டது.

இலங்கையில் தனது கோரக்கால்களை அழுந்தப் பதித்துவிட்டது; இதுவரை ஒரு பில்லியன் டாலர் முதலீடு, பல மில்லியன் டாலர்கள் நிதி உதவி; விரைவான வளர்ச்சியிலிருக்கும் சீன தொழில் துறைக்கு தற்போது பல மடங்கு எரிசக்தி தேவை. எரிசக்தியை எடுத்துச் செல்ல பாதுகாப்பான பாதையை உறுதிப்படுத்த வேண்டும். தென்னாசியாவின் பாதுகாப்பான பாதையாக இலங்கை இருக்கிறது. தென்னாசியாவில் தானொரு மூலதன வல்லரசாக ஊத்தம் கொள்ள – உலகப் பேரரசான அமெரிக்காவுக்குப் போட்டியாக உயரம் கொள்ள – இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கப்பாதை பாதுகாப்பான பாதையாக மாறியுள்ளது.

எனவே – “நேப்பாளமும், இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப் பாட்டையும் நாம் பாதுகாப்போம்.”- என சீன வெளியுறவுத் தொடர்பாளர் ஜியாங்பூ (22 -4-2009) வெளிப்படுத்தியபோது, சீன ஆதரவு கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு யாரும் விக்கித்துப் போகவில்லை. திருகோணமலை, அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை சீனா கைவசப்படுத்தியிருப்பது, தமிழர்களுக்கெதிரான போரில் சீனாவின் இராணுவ உதவி போன்றவைகளை இதனோடு இணைத்துக் கண்டால் உண்மை வெளிப்படும்.

அதன் காரணமாகவே ஐ.நா.வின், மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சியை சீனா, தன் “வீட்டோ” அதிகாரத்தால் முறியடித்தது. ருசியா, சீனா, வியட்னாம் போன்ற நாடுகளை வழிநடத்துவது – இன்று மார்க்சியம் அல்ல; சோசலிசமும் அல்ல, உலகமயம் என்னும் கருத்தாக்கம்தான். உலகமயமாக்கல் என்னும் பாதையில் தானொரு மிகப்பெரிய பங்குதாரியாவது அல்லது அதன் சிறுபாகமாகவாவது மாறுவது யதார்த்தம்.

ருசியா தோற்றுப் போன புள்ளியில் சீனா தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, தென்னாசியாவின் தலைமை வல்லரசாக உருக்கொண்டுள்ளது. உலகப் பேரரசு என்ற இடத்தைக் கைப்பற்ற, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாளை போட்டிக் களத்தில் நிற்கப்போகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 20 ஆண்டுகளாய் போரிட்டு விரட்டியடித்த வியட்னாம் இன்று அதே அமெரிக்காவோடு கை குலுக்கிக் கொண்டிருக்கிற கோலத்தைக் காணுகிறோம்.

மார்க்சிய சுவாசிப்பு இன்றி உயிர்வாழ முடியாது, கூடாது என்றிருந்த இடங்கள் இன்று உலகமயத்தோடு அனைத்துப் புரளாமல் உயிர்தரிக்க முடியாது என்றாகிவிட்டன. உலகமயமாதல் சூழலில், தத்தமது தேசிய பொருளாதார வளர்ச்சி என்னும் திட்டத்தை இந்நாடுகள் முன்னிறுத்துகின்றன. அது சொந்த மக்களை மட்டுமல்ல. பன்னாட்டு மக்களையும் சுரண்டுகிற தேசிய ஆளும் வர்க்கங்களின் செயல்பாடாகிவிடுகிறது. தேசிய முதலாளி, பன்னாட்டு முதலாளியாகிறான்.

மக்களின் பெயரால், அவனுக்கான தேசியம் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய உலகமயமாதல் சூழலில் தனியுடைமை நாடுகள் மட்டுமல்ல, பொதுவுடைமை நாடுகள் என்று சொல்லப்படுகிறவையும் இந்த உருவாக்கத்தில் இயங்குகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியப் பின்புலத்தில் இயங்கிய “சாடிஸ்டா” பயங்கரவாத ஆட்சியை (அன்றைய ராசபக்சே அவன் என்றால் பொருந்தும்) மிகப்பெரிய ரத்தக்களரிக்கிடையே.

கொரில்லாப்போர் முறையைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற கியூபா; நிகரகுவாவின் சாந்தினிஸ்டா இயக்கம் ஒரு அகிம்சைப் போராட்ட இயக்கமல்ல; ஆயுதமேந்திய இயக்கம்; 2001-ல் பொலிவியாவில் நிலத்தடிநீர் உரிமை காக்க ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் அம்மக்கள். ஏகாதிபத்தியம் தனது தோள்களில் சுற்றிவந்த அரச பயங்கரவாதத்தை லத்தீன் அமெரிக்க நாடுகளெல்லாம் எதிர்த்துப் போராடிய கடந்த காலத்தை மறந்துவிட்டன.

கியூபாவும் அதன் நேசநாடுகளும் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெறுவதையே இன்று விரும்பலாம். ஆனால் பிற நாடுகளில் இரத்தம் சிந்தி விடுதலை பெற மக்கள் விரும்பும் போது இவர்கள் தடையாய் ஏன் நிற்க வேண்டும்? தேசிய இனவிடுதலைப் போரில் ஒட்டுமொத்த மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் ராசபக்ஷேயை இவர்கள் ஏன் ஆதரித்தார்கள்? குறைந்த பட்சம் வன்னிக் களப் பிரதேசத்தில் கந்தல் கந்தலாக்கப்பட்ட மனித உரிமைகள் பற்றியாவது ஐ.நா. மன்றில் இவர்கள் பேசியிருக்க வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில், யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் உலகின் சார்பாக அனைவரையும் அனுமதிக்கத் தயாரா இருந்தார்கள். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் தளபதிகளை விமானக் குண்டுவீச்சில் கொலை செய்த போதிருந்து, புலிகள் அனைவரையும் வந்து பாருங்கள் என்று அழைத்தார்கள். ஐ.நா. போன்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை, உலகச் செய்தியாளர்களை, தொலைக்காட்சிகளை – எவரையும் அனுமதிக்க முடியாது என மறுத்த அரக்கனை இவர்கள் ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?

உலகத்தின் கண்களை உள்ளே பார்க்க வற்புறுத்துங்கள் என வேண்டிய புலிகளையும், உலகத்தின் கண்களை மூடி வெற்றியும் பெற்ற இலங்கை அரசையும் ஒப்பிட்டிருந்தால், இன அழிப்புக் குரூரம் புரிந்திருக்கும்; எது எதிர்க்கப்பட வேண்டியது என்னும் உண்மை கைவசமாகியிருக்கும். அனைத்துப் பயங்கரவாதங்களுக்கும் மூலம் அரச பயங்கரவாதம்; அது அனைத்துப் பயங்கரவாதங்களிலும் உச்சமானது; அது இனவெறிப் பயங்கரவாதமாய் வீசுகிறபோது இன்னும் இன்னும் குரூரமாய் மாறிவிடுகிறது. ஏனெனில் பெருந்தேசிய இனம் என்ற ஒரு பகுதி மக்களை தன் பக்கமாய்த் திரட்டி நிறுத்திக் கொள்கிறது.

மக்களின் ஒரு பகுதியினரை, இன்னொரு பகுதியினரைக் கொண்டே அழித்தொழிப்புச் செய்வது எளிதாக நிறைவேறி விடுகிறது; இன்றைய சூழலில் இலங்கை அரசின் இனவெறிப் பயங்கரவாதம் எவரை பயங்கரவாதிகளாகக் கட்டுகிறதோ, அவர்கள் கையாளும் தொழில் நுட்ப பயங்கரவாதச் செயல்களைக் காட்டிலும் கூடுதலாய் – உச்சமாய் பயங்கரவாத உத்திகளை இனவெறி அரச பயங்கரவாதம் கையாண்டது. இன்னும் தெளிவுபடுத்தினால், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுவோர் அல்லது அடையாளப்படுத்தப்படுவோர் கையாள முடியாத புதிய உத்திகளையெல்லாம் முன்கையெடுக்கிறது.

அது பற்றி தொடர் ஆய்வு செய்யும், செயல்படுத்தும் தனி அமைப்புக்களை உருவாக்கி வளர்த்துக் கொள்கிறது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதன் இயக்கமும் அதுவாகிப் போகிறது.அரச பயங்கரவாதம் உலகளாவிய பயங்கரவாதமாக இணைப்புப் பெற்ற இக் காலத்தில், அதை எதிர்த்துப் போராடுகிற நிலைமை 50 ஆண்டுகளுக்கு முன் னிருந்தது போல் இன்றில்லை. கியூபா போராடிய காலத்து நிலை இப்போது இல்லை.

உலக அரச பயங்கரவாதத்தை யெல்லாம் ஒன்றிணைப்புச் செய்து தன் முஷ்டியை முறுக்கி – ஒரு விடுதலைப் போரை ஒரே குத்தில் வீழ்த்திவிட முடியுமென்றால், கியூபாவும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளும் யார் பக்கம் நிற்க முற்பட்டிருக்க வேண்டும்? தெள்ளத் தெளிவாக அவர்கள் உலக அரச பயங்கர வாதத்தினோடு கை கோர்த்தார்கள் என்பதுதான் உண்மை.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தை நாம் தாண்டியாகிவிட்டது என்று கியூபா போன்ற நாடுகள் கருதுகின்றன. இங்கு “நாம்” என்று சுட்டுவது உலக முழுமையுமான நாம்! ஆயுதப்போராட்டத்தை அவர்கள் கடந்து விட்டார்கள் என்பதனால், நம்முடைய நிகழ்ச்சி நிரலிலும் அது முற்றுப்புள்ளியாகிவிட்டது என்று பொருளல்ல; உலக நிகழ்ச்சி நிரலிலும் அது காலாவதியாகி விடவில்லை.

ஏனெனில் அரச பயங்கரவாதமற்ற ஒரு உலகு உருவாகவில்லை. தேசிய இனப் போராட்டங்கள், விடுதலைப் போராட்டங்கள் இன்னும் ஆயுதகளத்தில் தான் நிற்கின்றன. இதனடிப்படையில் கியூபாவில் வசிக்கும் மார்க்சியரான ரெட்னூர், “கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்ப வசமானது” – என்று விமர்சித்திருக்கிறார். இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தில் இயங்கும் தோழர், எழுத்தாளர் அமரந்தா – தோழர் இபிடரல் காஸ்ட்ரோ வின், 80வது பிறந்தநாளை சென்ற ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்தவர்.

சோசலிச கியூபாவின் கல்வி, மருத்துவம், பேரழிவு இடர், மனித உரிமைகள், கலை, இலக்கியம் ஆகிய பல்துறைச் சாதனைகளையும் விளக்கும் எட்டு நூல்களை அந்த நேரத்தில் வெளியிடக் காரணமாயி ருந்தவர். “தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று எவ்வாறு முடிவு செய்ய முடிந்தது? ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லொணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா?” என்று கியூபா போன்ற நாடுகளின் நிலைப்பாட்டை விமரிசித்து கடிதம் எழுதினார்.

அவருடைய கடிதம், கியூபாவின் மனசாட்சியை உலுக்கியதோ இல்லையோ, அங்குள்ள ரெட்னூர் போன்ற மார்க்சியர்களை யோசிக்க வைத்திருக்கிறது. “நமது ஆயுதப் போராளி நண்பர் (கியூபா) ஆயுதப் போராட்டத்தில் சோர்வுற்றுப் போய்விட்டார்” என்று கேலி செய்துவிட்டு, “தற்போது நடைபெறுகின்ற பூர்சுவா ஜனநாயகப் போராட்டங்களினால் சாதகமான விளைவுகளைச் சந்தித்து வரும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளின் கதகதப்பான நட்புறவில் இளைப்பாற முயல்கிறார்.

ஆனால் ஆயுதப் போராட்டமென்னவோ கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்கிறது. காரணம், பெரும்பான்மையான மக்கள் சனநாயகத்தையும் அமைதியையும் நல்வாழ்வையும் விரும்புவதால் மட்டுமே பூர்ஷ்வாக்களோ, அமெரிக்க ஏகாதிபத்தியமோ ஒரு போதும் மாறப்போவதில்லை” என கியூபாவை, இலங்கைக்குத் துணை போன நாடுகளை விமரிசிக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சோசலிசக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள – சனநாயக சோசலிசக் கண்ணோட்டம் எனும் அமைப்பின் உறுப்பினர் க்ரீஸ்-ஸ்லீ- இதற்கு சரியான எதிர்வினையாற்றியுள்ளார். “கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்ற மடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் கியூபா இந்நாடுகளின் அரசின் தன்மையைக் கணக்கில் கொள்வதில்லை… ஆனால் இந்நாடுகள் தமது மக்களை ஒடுக்குவதைக்கூட கியூபா விமரிசிக்காமல் இருப்பதுதான் இதன் மறுபக்கம்” என்று விளாசியிருக்கிறார்.

சீனாவோ, ருசியாவோ அல்லது கியூபாவோ, நிகாரகுவாவோ – அவரவர் தேசிய நலன்களோடு கட்டம் கட்டி நின்று விட்டார்கள். அரசுகளோடு அரசு உறவு – நாடுகளோடு நாடு உறவு என்ற இந்த அடிப்படையில் சர்வதேசியத்தை ஒதுக்கிவிட்டார்கள். சர்வ தேசியம் என்பது பிற நாடுகளின் மக்களோடு கொள்ளும் உறவு என்பதற்குப் பதிலாய், இரு அரசுகளிடையே கொள்ளும் உறவாகச் கருக்கப்பட்டுவிட்டது.

அதனாலேயே ஏகாதிபத்தியங்களோடு கொள்ளும் ராஜதந்திர உறவைக்கூட சர்வதேசியம் என்னும் இலக்கணத்துக்குள் நுழைக்க முயல்கிறார்கள். இலங்கையின் அப்பட்டமான மனிதப் படுகொலைகளை ஆதரித்த சீனா, ருசிய நாடுகளுக்கும் கியூபா, நிகாரகுவா, பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் – இனி பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தட்டிக்கேட்க எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

ஒருவனுக்கு எதிர்ப்பு, அதே வெறியாட் டத்தை நடத்தும் இன்னொருவனுக்கு ஆதரவு என்னும் இரட்டை நிலை கேவலமானது. ஏகாதிபத்திய பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். தங்களை யறியாமலே, ஏகாதிபத்தியமும் உள்ளடங்கிய உலக அரச பயங்கரவாதப் புள்ளியில் கூடிவிட்டார்கள்.

– சூரிய தீபன்

நன்றி: தென்செய்தி (16.08.2009)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*