TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அமைதியே இலங்கைத்தமிழர்களின் உடனடித் தேவை: ஐ.நா. தூதரக அதிகாரி

picவன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவை அமைதியே என்று அந்த முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்போது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக கனேடிய சட்ட அதிகாரியாகப் பணியாற்றிவரும் டெனிசி ஒட்டிஸ் என்ற பெண்மணி, தூதரக வார இதழுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

’’நாங்கள் மனித உரிமை ஆர்வலர்களாகவே பெரியளவில் கருதப்பட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக காலை 8:00 மணிக்கு முன்னரும் மாலை 6:00 மணிக்குப் பின்னரும் வீதிகளில் இருப்பதற்கு எமக்கு அனுமதி கிடையாது.

பொதுவாகச் சொல்வதானால் நாம் அங்கு இருக்கும்போது மக்கள் மோசமாக நடத்தப்பட்டமையை பார்க்கவில்லை. ஆனாலும் அடிமட்ட நிலையில் அந்த மக்கள் முட்கம்பி வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாகச் சொன்னால் அங்கு நடமாடும் சுதந்திரம் இல்லை. ஆனால் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான அடிப்படை விதி.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நியதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் முதல் விதியே அவர்களுடைய நடமாட்ட சுதந்திரம்தான்.

ஆழிப்பேரலை தாக்கியபோது உட்பட இலங்கையில் இதற்கு முன்னரும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

மக்களை அடைத்து வைத்திருப்பதற்கான முதன்மைக் காரணமாக அரசு கூறுவது பாதுகாப்பு. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அதனை ஏற்றுக்கொண்டுள்ளது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் இன்னும் அவர்கள் அடைத்தே வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களைச் சுற்றிலும் உள்ள பிரதேசம் படைமயப்பட்டுள்ளது. தொடக்கத்தில் படையினரும் இந்த முகாம்களில் மக்களுடன் சேர்ந்திருந்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த வெளியேற்றம் நடந்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அது மற்றொரு விதி.

முகாம்கள் படைமயப்படுத்தப்படக்கூடாது. எப்படி இருப்பினும் முகாம்களின் வெளிப்பகுதி பெரிதும் படைமயப்பட்டே உள்ளது. ஆனால் உள்ளே பொதுமக்கள் மட்டுமே இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் அது விதிமுறைக்கு மாறானது. ]

முகாம்களில் உட்கட்டுமானம் தேவையான அளவுக்கு இல்லை. ஆனாலும் மக்கள் வசிப்பதற்கு தங்களால் முடிந்ததை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் முன்னர் வசித்த பகுதிகள் எல்லாமே கண்ணிவெடிகளால் சூழப்பட்டிருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது.

ஆனாலும் அவர்களை சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதில் ஆபத்துக்கள் இருக்கவே செய்கின்றன. அதுவரைக்கும் அவர்கள் (அரசு) தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். நான் நினைக்கிறேன், அந்த மக்களுக்கு உணவு அளிப்பது குறித்தே அதிகாரிகள் அதிகம் சிந்திக்கிறார்கள் என்று. ஆனாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுதான் பிரச்சினையே.

அமைதி அந்த மக்களுக்கு உடனடியாகத் தேவை. எல்லோரையும் போலவே தமிழர்களும் அமைதியுடன் வாழவே ஆசைப்படுகிறார்கள். தமது பிள்ளைகளை அமைதியாக வளர்க்கவே விரும்புகிறார்கள். போர் எப்போதுமே போர்தான். ஒரு கட்டத்தில் நீங்கள் அமைதிக்குத் திரும்பியாக வேண்டும். அதுதான் இப்போது அந்த மக்களில் பெரும்பான்மையானவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.

அங்கு இப்போது உள்ள மிகப் பெரிய பிரச்சினை அந்த மக்களுக்கான நடமாட்ட சுதந்திரம் இல்லாமைதான். அது உண்மையில் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படை. அதை நடைமுறைப்படுத்துவது எமது உரிமையும் கடமையும்கூட’’என்று தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*