TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வவுனியா முகாம்களில் மற்றொரு மனிதப் பேரவலம்

vavuniyaவவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் வெள்ளம் மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்குள் புகுந்துகொண்டிருப்பதால் அதற்குள் இருக்க முடியாத சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளியே வந்து குழந்தைகள், நோயாளிகளுடன் கொட்டும் மழையில் நனைந்துகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சி செய்ததையடுத்து பெரும் தொகையான தரைப் படையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டு மக்கள் எவரும் முகாம்களில் இருந்து தப்பிச் செல்லாதவாறு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள படையினரால் வவுனியா மெனிக் பாமில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்களில் முன்பகுதியில் உள்ள முகாம்கள் ஓரளவுக்குப் பராமரிக்கப்படுகின்ற போதிலும் பின்பகுதியில் உள்ள முகாம்கள் மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் கடும் மழையைத் தாக்குப் பிடிக்க முடியாதிருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பொழிவதால் இந்த முகாம்களுக்குள் பெரும் வெள்ளம் புகுந்துகொண்டிருப்பதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய மழை அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தால் இந்த அவலநிலை மேலும் மோசமடையலாம் என வவுனியாவில் இருந்து தொடர்புகொண்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரவு வேளையில் மழை, குளிர் ஆகியவற்றுக்கு மத்தியில் மக்கள் தவித்துக்கொண்டிருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனையிட்டு எவ்வித கவனத்தையும் செலுத்தாத அரசு மக்கள் அங்கிருந்து தப்பி வெளியே சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கவனமாக உள்ளது.

இதேவேளையில் வவுனியாவில் இருந்து தொடர்புகொண்ட மற்று ஒருவர் தொடரும் மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக முகாமில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*