TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடை முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் – சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை

makkalசிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தடை முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்ரர்நஷனல் சிறிலங்கா அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்த ‘முகாம்களை திறந்து விடுங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்கி வைத்து, இந்த அமைப்பின் அதிகாரிகள் பேசும்போது, இந்த முகாம்களிலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவை உண்மையில் தடுப்பு முகாம்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனினும், இவர்களது இந்தக் கோரிக்கையை சிறிலங்கா நிராகரித்துள்ளது. தடுப்பு முகாம்களுக்குள் பதுங்கி உள்ள விடுதலைப் புலிகள் அனைவரையும் கைது செய்த பின்னரே அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை வெளியேவிட முடியும் என்று சிறிலங்கா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சட்டமா அதிபர் இந்தக் கருத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளார்.

அரசால் படையினரின் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தது. நேற்று திங்கட்கிழமை அந்த மனுவுக்கு எழுத்து மூலம் பதிலளித்த சட்டமா அதிபர், விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கண்டறியும் வரை மக்களை வெளியேற அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களை மீளக் குடியேற அனுமதிக்கவுள்ளதாக உலக நாடுகளுக்கு கூறி அந்நாடுகளிடம் இருந்து நிதிகளைப் பெற்றுக்கொள்ளும் சிறிலங்கா, அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்பதுடன், மக்களை தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைப்பதற்கே முயன்று வருகின்றது.

எனினும், கடந்த இரு மாதங்களாக இந்திய வெளிவிவகார அமைச்சர், முகாம்களில் உள்ள மக்களை 180 நாட்களுக்குள் சொந்த இடங்களில் குடியேறுவதற்கு சிறிலங்கா அனுமதிக்கும் என ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கூறி வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது அந்த மக்களை விடுவித்து அரசாங்கத்தின் பகுதிக்கு வருவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நாடுகளும், அமைப்புகளும் தற்போது மூன்று மாதங்களாக மூன்று இலட்சம் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மௌனம் காத்து வருவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*