TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க சிறிலங்கா அனைத்து வழிகளையும் கையாண்டுள்ளது

Jaffna TNAசர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டதென்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் அரசாங்கம், யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறுவதன் மூலம் யுத்தம் இடம்பெற்ற பிரதேச மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சர்வதேசத்துக்குக் காண்பிப்பதையே நோக்காகக் கொண்டு செயற்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா நேற்று வியாழக்கிழமை சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; 8ம் திகதி (நாளை சனிக்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

யுத்தம் முடிவடைந்த நிலையிலும் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 3 இலட்சம் மக்கள் நிவாரண கிராமம் எனும் பெயரிலான அரச தடுப்பு முகாம்களில் அவர்களது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் இந்தத் தேர்தலை கேட்கவுமில்லை, விரும்பவுமில்லை. எனினும் ஜனாதிபதியும் அரசாங்கமும் தங்களுக்குத் தெரிந்த சில காரணங்களுக்காகவும் அவற்றின் அடிப்படையில் எழுந்திருக்கும் நோக்கத்திற்காகவும் அவசர அவசரமாக இந்தத் தேர்தலை மக்கள் மீது திணித்துள்ளனர்.

சில தமிழ் குழுக்களையும் இணைத்துக்கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச வளங்களைப் பாவித்துக் கொண்டு வாக்காளர்களை வாக்களிக்கச் செய்து அந்த வழியிலாவது வெற்றிபெற்று விட முடியுமென்ற நம்பிக்கையில் செயற்படுகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சிறந்ததோர் அரசியல் தீர்வொன்றைக் கொண்டு வருவதற்குப் பதிலாக குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்தத் தேர்தலை நடத்த முயன்றமையானது எமக்கு ஏமாற்றமளிக்கிறது.

இதேநேரம், யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தலில் தமது கட்சி சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்ற ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பம் இறுதியில் நிறைவேறவில்லை. ஏனெனில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்திலேய இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார் என்று நான் கருதுகிறேன்.

அத்துடன், யுத்தம் நடைபெற்ற இறுதி 6 மாதகாலப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதை சந்தேகமின்றி கூற முடியும். இதை சர்வதேச அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. யுத்த பிரதேசத்தில் இருந்த, யுத்தத்துடன் தொடர்பில்லாதவர்களே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றனர். சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.

சர்வதேச நாடுகள் இது தொடர்பான குற்றச் சாட்டுகளை முன் வைத்திருக்கும் நிலையில், யுத்தம் நடைபெற்ற இரு பகுதிகளில் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெறுவதன் மூலம், யார் என்ன குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக் காட்டும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.

அமைச்சர்கள் பலரும் யாழ்ப்பாணம் வந்து மக்களை கவர்ந்திழுக்கும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது, தேர்தல் சட்டத்துக்கு முரணான செயலாகும். ஆனால், நாம் சட்டத்தை மதித்து செயற்பட்டு வருகிறோம். மீன் பிடித்தடை நீக்கப்பட்டு விட்டதாக பெரிதாக பிரசாரம் செய்யப்பட்டாலும், அங்கு ஒட்டு மொத்தமாக தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டு விடவில்லை.

இந்த நிலையில் தங்களுக்கு வாக்களிக்கா விட்டால் மீண்டும் முழங்கால் அளவு நீரிலேயே மீன்பிடிக்க வேண்டியிருக்குமென ஒரு கட்சி மக்களை அச்சுறுத்தியிருக்கின்றது. அது மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விபரங்களை திரட்டி அவர்களின் வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக சென்று அந்தக் கட்சியால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. கொழும்புதுறை, ஈச்சமோட்டை, ஆஸ்பத்திரிவீதி, குருநகர் போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் பறித்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இதேநேரம், வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் பிரதம தபால் அலுவலகத்திற்கு சென்றால் அவை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சில தினங்களுக்குள் 10 சிற்றூழியர்கள் பிரதம தபால் அலுவலகத்தில் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எதற்காக இந்த வாக்காளர் அட்டைகள் அந்தக் கட்சி தலைமையகத்துக்கு சென்றுள்ளன.

அந்தக் கட்சித் தலைவர் பாடசாலைகளுக்கு சென்றும் கூட பிரசாரங்கள் செய்துள்ளார். அக் கட்சியின் பிரசார சுவரொட்டிகளை ஒட்ட படையினரின் வாகனங்கள் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன. பாசையூரில் நடைபெற்ற எமது கூட்டத்திற்கு வந்த மக்கள் அந்தக் கட்சியால் மறிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றும் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். இது, எந்த விதத்தில் ஜனநாயகமாக அமையுமென்பதே எமது கேள்வி.

இதேநேரம், தேர்தலுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டிருப்பது எதற்காக? எப்படியாவது யாழ்ப்பாணம் மாநகரசபையை பிடித்து விட வேண்டுமென்ற ஆர்வம் இதில் தெரிகிறது. வவுனியாவிலும் ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவர் அடாவடித் தனங்களில் ஈடுபடுகிறார்.

எமது உறுப்பினர்களும் அவரால் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையிடம் முறைப்பாடு செய்தும் எந்தப் பலனுமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இந்த தேர்தலில் எம்மை தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*