TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“போர் முடிந்து விட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் முடியவில்லை”

இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்பதையே, கடந்த வாரம் புகழ்பெற்ற ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் காட்டுகிறது.

ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இலங்கையில் தென்படவில்லை என்பதையே இந்தத் தாக்குதல் குறிப்பதாக உலகம் முழுதும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு (2009) ஜனவரியில் இருந்து இலங்கையில் இருக்க முடியாமல் இதுவரையில் 20-க்கும் அதிகமான முன்னணி ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி ஊடக ஆர்வலர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் வெளியேறி இருக்கிறார்கள்.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான போத்தல ஜயந்த அரசின் கோபத்துக்கு ஆளாகி இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கடையில் குழந்தைக்குத் தின்பண்டம் வாங்கிக் கொண்டு, ஒரு வெள்ளை வானைக் கடந்து சென்றபோது, அதில் இருந்தவர்கள் அவரை வானுக்குள் இழுத்துப் போட்டு 45 நிமிடங்களுக்கு அவரை இரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர்.

இடது கால் முறிந்து, வலது கால் காயம் அடைந்து, விரல்கள் நசுங்கிய நிலையில் போத்தல ஜயந்த இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கால் முறிந்தாலும் போத்தல ஜயந்தவின் உணர்வுகள் முறியவில்லை.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி 6 ஆம் நாள் எம்ரிவி/எம்பிசி தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு ‘த சண்டே லீடர்’ ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப் பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

‘ரிவிர’ ஏட்டின் ஆசிரியரான உபாலி தென்னகோன், அவர் மனைவி அருகில் இருக்கும்போதே கத்தியால் குத்தப்பட்டார். மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் வார இதழான வார ‘உரைகல்’ ஆசிரியர் ரகமதுல்லா ஏப்ரலில் ஆயுதம் தாங்கிய கும்பலால் தாக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 இல் ‘சுடரொளி’ ஆசிரியர் வித்யாதரன் கடத்திச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டு மே மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்டதற்காகப் பணம் பெற்ற ஊடகவியலாளர்களின் பட்டியல் அரசிடம் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்குப் பயனளிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்கப்படுவர் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மிரட்டியிருக்கிறார்.

இவையெல்லாம் இலங்கையில் ஊடகத்துறைப் பணியில் தொடருவதற்கான நம்பிக்கையைப் ஊடகவியலாளர்கள் இடையே ஏற்படுத்துவதாக இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*