TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வாக்களியுங்கள். யாழ், வவுனியா மக்களிடம் நெதர்லாந்துத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்!

election-boxஅன்பார்ந்த யாழ், வவுனியா வாழ் தமிழீழ மக்களே!

வணக்கம்.

எதிர்வரும் சனியன்று (08.08.2009) தாயகத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. உலகமே வெட்கித்தலைகுனியும் பாரிய இனப்படுகொலைகளை வன்னியில் நடாத்திமுடித்த கையோடும், 3 இலட்சம் மக்களை முட்கம்பி வேலிகளிற்குள் அடைத்து வைத்துக்கொண்டும் இத்தேர்தலை சிங்கள அரசு அவசர அவசரமாக இரத்தக்கறையுடன் நடாத்துகின்றது.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற ஆயுதப் போராட்டமானது பயங்கரவாதப் பிரச்சனையேதவிர தமிழ் மக்களிற்கான உரிமைப் போராட்டமல்ல என்பதனை வெளியுலகிற்குத் தெரிவிக்க இத்தேர்தலை சிங்கள அரசு பயன்படுத்தப்போகின்றது.

எனவே, சிங்கள அரசின் இக்கபடநோக்கத்தை நிறைவேற்ற பெரும் இன அழிவைச் சந்தித்த நாம் அனுமதிக்கக்கூடாது. தாயகத்தில் அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்பட்டபோதுதான் ஆயுதப்போரட்டம் வெடித்தது.

இன்று அந்த ஆயுதப்போராட்டம் பெரும் இனஅழிப்பின்பின் மௌனமாக்கப் பட்டுள்ளது. ஆனாலும், தமிழர்களின் பேராட்டம் தணிந்துவிடவில்லை. அது தற்போது வேறுவடிவம் பெற்றுள்ளது.

இந்த நேரத்தில்தான் யாழ், வவுனியா வாழ் தமிழ் மக்கள் இத்தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். இத்தேர்தலில் தன்கபடநோக்கத்தை நிறைவேற்ற சிங்கள அரசானது பலதுணைக்குழுக்களை தன்னோடு இணைத்தும் தனியாகவும் போட்டியிடவைத்துள்ளது.

அத்துடன், முகாம்களில் வாழும் சிலமக்களிற்கு சலுகைகளைப்புரிகின்ற தேர்தல்கால நாடகங்களையும் சிங்கள அரசும் இக்குழுக்களும் இன்று அரங்கேற்றி நன்றாகவே நடிக்கின்றார்கள். இவ் நடிப்பைக்கண்டு எமது மக்கள் ஏமாந்துபோய்விடக்கூடாது.

இச்சலுகைகளிற்காக பல்லாயிரம் மாவீரர்களும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்களும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கவில்லை, என்பதனையும் நிரந்தரத் தீர்விற்காகவே அவர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தார்கள் என்பதனையும் நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.

எனவே, தங்களின் பலநாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்கள் சிங்கள அரசினால் ஏற்கனவே பறிக்கப்பட்டாலும் தமிழ்மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே.

இத்தேர்தலிலும் “தமிழ்மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சனைக்குத்தீர்வாக அமையும்” என்று பல உயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கே வாக்களிக்குமாறு யாழ், வவுனியாவாழ் தமிழ்மக்களை அன்போடும் உரிமையோடும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

மனதில் கவலைகளையும் சோர்வையும் சுமந்து வாக்களிக்காமல் இத்தேர்தலைப் புறக்கணித்தால், எதிரியே வெல்வான். எனவே, வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். உங்களிற்குக் கிடைத்திருக்கும் இத்தேர்தல் வாக்கை தமிழினப் படுகொலைகளைப் புரிந்த சிங்கள அரசிற்கெதிராகப் பயன்படுத்துங்கள்.

தமிழின உரிமையை வென்றெடுக்க சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துங்கள். தமிழர்களிற்கு சிங்கள அரசால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளையும் பாரிய உயிர்ச்சேதங்களையும் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையையும் இத்தேர்தல்மூலம் வெளிப்படுத்துங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களியுங்கள்!

தமிழினப் போராட்டம் வெல்லும்வரை

நாம் அனைவரும் இணைந்து ஒன்றாய் போராடுவோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி

நெதர்லாந்துத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*