TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சரத் ஃபொன்சேகா விடயத்தில் அரசின் காய்நகர்த்தல் எதிர்பார்க்கும் பலனைத் தருமா? – ஆய்வு

seஜெனரல் சரத் ஃபொன்சேகா 2005 டிசம்பர் 6 ஆம் திகதியிலிருந்து இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்திருக்கிறார். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி, அப்பாவி தமிழ் மக்கள் 20000 இற்கும் மேற்பட்டோரைக் கொன்று சணடையை நிறைவுக்கும் கொண்டு வந்தவர். இவரின் பதவிக் காலம் ஏற்கனவே முடிவடைந்திருந்த போதிலும், வன்னியில் தொடங்கப்பட்டிருந்த போரை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி அவரது பதவிக் காலத்தை நீடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் புலிகளை வென்றுவிட்டோம் என்ற களிப்பில் இருந்த அரசு, சரத் ஃபொன்சேகாவின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவுக்கு வருமுன்னரே அவரை, வெற்றிக்கு வழிவகுத்த அந்தப் பதவியிலிருந்து தூக்கிவிட்டது. மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பில் இருந்த ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கு யோசித்து முடிவு சொல்லக்கூட போதிய கால அவகாசம் வழங்காமல், எடுத்த எடுப்பிலேயே அவரின் ஓய்வைப்பற்றி அரசு தாமே அறிவித்ததால் அவர் மிகவும் கவலையடைந்து இருந்ததாக இராணுவ அதிகாரிகளை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 2009 ஜூலை 15 ஆம் திகதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா வேண்டா வெறுப்பாக கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றார். சரத் ஃபொன்சேகா கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என, பல ஊடகங்கள் பிரசாரம் செய்து வந்தாலும், அந்தப் பதவி எந்தவித செயற்திறனும் அற்ற ஒன்று என்பதே சரத் ஃபொன்சேகாவின் கருத்தாக இருந்தது என்றும் செய்திகள் வந்தன. அதிகாரமே இல்லாத ஒரு புதிய பதவியை உருவாக்குவதற்கு, பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டது. உண்மையில் இது ஒரு பதவிபறிப்பு நடவடிக்கை என்பது இப்போதைய தகவல்களால் உறுதிபடுத்தப்படுகின்றது.

மேலும் தொடர்ந்தும் சில வருட காலத்துக்கு இராணுவத் தளபதியாக இருந்து இராணுவத்தை பாரிய சக்தியாக உருவாக்குவதற்கான திட்டம் ஒன்றை சரத் பொன்சேகா வைத்திருந்ததாகவும், இருந்த போதிலும் அவரது அபார வளர்ச்சி தமக்குப் பாதகமாக அமையலாம் எனக் கருதிய ராஜபக்ஷ சகோதரர்களே (கோத்தபாய ராஜபக்ஷவும் சரத் ஃபொன்சேகாவும் நெருங்கிய நண்பர்களாம்?) அதிகாரமற்ற பதவிக்கு அவரை மாற்றியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் சரத் ஃபொன்சேகாவுக்கு ராணுவத்தினரிடையேயும், மக்களிடையேயும் பலத்த செல்வாக்கு இருந்தது. இப்போது போரில் வெற்றி கொண்டதும் அந்தச் செல்வாக்கு இன்னும் அதிகரித்துள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்த எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது பிரதான ஜனாதிபதி வேட்பாளராக சரத் ஃபொன்சேகாவை நிறுத்துவதற்கு திட்டமிட்டதாகவும் ஒரு தகவல். இதனால் ஆளும் கட்சியுடனும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடனும், சரத் ஃபொன்சேகவிற்கு தொடர்ந்து முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த முறுகல் நிலையை அடுத்தே “இராணுவத் தளபதி பதவியை துறந்தமை குறித்து நான் கவலைப்படவில்லை. இந்தப் பதவியை துறக்க நேரிடும் என நான் அறிந்து வைத்திருந்தேன். எதிர்வரும் காலங்களில் மட்டுமல்லாது, எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடும் ஆர்வம் எனக்கில்லை” என்ற அறிக்கையை ஜூலை 20 அளவில் சரத் ஃபொன்சேகா வெளிவிட்டார். எனவே இவர் தொடர்ந்தும் மக்கள் சேவையில் ஈடுபட்டால் தமது அரசியல் வாழ்வுக்கு அஸ்தமனம் வந்துவிடும் என்று கலங்கிய அரசு, தொடர்ந்து சரத் ஃபொன்சேகாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் குறைத்து விட்டது. பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளதால், அவர் வெளியே உயிர்ப்பயமில்லாமல் நடமாட முடியாத நிலை. இந்த நிலை தொடர்ந்தால், சரத் ஃபொன்சேக உயிர் பிழைக்க நாட்டை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி அவர் நாட்டை விட்டு வெளியேறினால் தற்போதைய அரசுக்கு வரவிருந்த ஆப்பு அகன்றுவிடும். ஆனால் தொடர்ந்து என்ன நடக்கவுள்ளது? அரசு எதிர்பார்ப்பது போல அவர் நாட்டை விட்டு வெளியேறுவாரா? அல்லது இருந்து ஆப்பு வைப்பாரா?

இந்தக் கேள்விகள் ஏனெனில், சரத் ஃபொன்சேகாவின் பாதுகாப்பையும், பணியாளர்களையும் குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது பிரச்சார நடவடிக்கைகளை ஜே.வி.பி. முடுக்கிவிட உள்ளது என்ற செய்தி இன்றைய இணையங்களில் உலாவரத் தொடங்கியுள்ளது.

பின்குறிப்பு: போர் முடிந்த கையோடு பல ராணுவ தளபதிகள் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டதன் உள்நோக்கம், அவர்கள் இலங்கையில் இருந்தால் அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்றுவிடுவார்கள் என்பதால், தூதுவர்களாகப் பதவி கொடுத்து நாட்டுக்கு வெளியிலேயே மகிந்த அரசு அவர்களை நிறுத்தி வைத்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*