TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இனப்பிரச்சினையும் இழுத்தடிப்புக்களும்

tamil_child_vavuniya_idp_campதமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு காலா காலத்தில் ஒரு நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் காணப்பட்டிருந்தால் தமிழர் தரப்பிலான ஆயுதப் போராட்டமோ தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசவமோ 25 வருடகால யுத்தமோ இடம்பெற்றிருக்க முடியாது.

தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்துவதற்கோ பல இலட்சக்கணக்கான தமிழர் இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழவேண்டிய நிலைமை

ஏற்பட்டிருக்காது. ஆளும் வர்க்கத்தினர் இவற்றையெல்லாம் அறிவுபூர்வமா,அரசியல் முதிர்ச்சி கொண்டு அலசுவதை விடுத்துத் தாமே உருவாக்கிவிட்டதாகிய விடுதலைப்புலிகள் மீது பழிபோடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. உலகத்திலேயே மிகக் கொடூரமான அந்த இயக்கம் தான் நாடு எதிர்நோக்கிவந்த பாரிய பிரச்சினை என்பதால் அது 25 வருடங்களின் பின்னர் சென்ற மே மாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட வெற்றிக் களிப்பே இன்றும் மேலோங்கி நிற்கின்றது.

நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவின் முன்முயற்சி காரணமாக முன்பு போர்முனையிலிருந்து தப்பியோடியதற்காக கைது செய்து சிறைவைக்கப்பட்டிருந்த 1883 ஆயுதப்படையினர் விடுதலை செய்யப்பட்டுமுள்ளனர். அது பெரிதும் அலட்டப்பட வேண்டிய பிரச்சினையல்ல.

சர்வகட்சிக் குழுவின் அறிக்கை

மறுபுறத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் (IDPS) என அடையாளப்படுத்தி வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீள் குடியேற்றம் செய்யும் விடயத்தில் என்றாலும் சரி அடிப்படை விடயமாகிய தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் என்றாலும் சரி இழுத்தடிப்பு மனோபாவத்தையே காணமுடிகிறது. முதலில் அரசியல் தீர்வு விடயத்தினை எடுத்துக் கொண்டால் 3 வருடகாலத்திற்கு முன்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதாகிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு (APRC) இவ்வாரம் தமது அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் போவதாக குழுவின் தலைவர் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண அறிவித்துள்ளார். தமது அறிக்கையானது விரைவில் வெளியிடப்படும் என்ற செய்தியோடு அமைச்சர் வித்தாரண சென்ற வாரம் ஆங்கில இதழொன்றுக்கு (டெய்லி மிரர் 22.07.09) வழங்கியிருந்த செவ்வியை சற்று நோக்குவோம். அதாவது தேசிய இனப்பிரச்சினை கடந்த ஆறு தசாப்தங்களாகப் பதிவு செய்துள்ள பரிமாணங்கள் உள்ளிட்ட வரலாற்றினைச் சுருக்கமாகவும் பெரும்பாலும் ஒளிவுமறைவு இன்றியும் கூறியுள்ளார். அங்கே அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.

“1977 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டும் அவர்களின் சொத்துகள் அழிக்கப்பட்டும் வந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பின் சிங்கள மக்களின் மனக்குறையை நீக்குவதற்காக 1956 இல் சிங்கள மொழியானது அரச கருமமொழியாக்கப்பட்டதாயினும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் மொழி அரச கருமமொழியாக்கப்படவில்லை. எனவே, அன்று பலத்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்படும் நிலை உருவாக்கப்பட்டது. ஏன் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்பட்டனர்’.

“கறுப்பு ஜூலை’

1983 “கறுப்பு ஜூலை’ என இனங்காணப்பட்டதும் கொடூரம் நிறைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதுமான கால கட்டத்தில் கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்தே தமிழர் பெருவாரியாக நாட்டை விட்டு ஓடினர். மேலும், பெருவாரியானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ வேண்டியதாயிற்று. அந்தக் கட்டத்திலேயே தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்கள் எழுந்து அரசுக்கெதிராகப் போராடத் தலைப்பட்டன என்றெல்லாம் வித்தாரண விபரித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவினால் APRC நியமிக்கப்பட்ட போது APRC யின் அறிக்கையினை விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியும் என்றே ஜனாதிபதி பிறப்பித்த ஆணையில் அன்று குறிப்பிட்டிருந்தார் எனவும் வித்தாரண கூறியுள்ளார்.அப்போது இராணுவ ரீதியாகவே தீர்வு என்று எண்ணப்பட்டிருக்கவில்லை. இப்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முற்றுப்பெற்றுவிட்டதாயினும் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வு காணப்படாமலேயே உள்ளது எனவும் வித்தாரண மேலும் குறிப்பிட்டுள்ளதோடு பின்வருமாறும் அவர் கூறியுள்ளதை காணலாம்;

“” அதிகாரத்தில் சமத்துவமான பங்கினை அவர்கள் (தமிழர்) பெற்றுக்கொள்ளலாமென நாம் கூறவேண்டும். ஆகவே,மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டும்.அவ்வாறாகவே ஒரு அரசியல் தீர்வை எட்டமுடியும். இதற்காகவே APRC உழைத்து வருகிறது. இராணுவ ரீதியாக வெற்றியீட்டப்பட்டுள்ள படியால் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதென எண்ணுவது தவறாகும்’.

எவ்வாறாயிலும் APRC யின் அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாகவே அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட பின்னரே இனப்பிரச்சினை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென ஜனாதிபதி ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துவிட்டார். தனது வெற்றி உறுதி என்ற ரீதியிலேயே அவர் பிரச்சினைத்தீர்வுக்கு மக்களின் ஆணை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு ஒத்ததாகவே வித்தாரணவும் தனது செவ்வியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். அதாவது,அரசியல் தீர்வு முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க.) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை(த.தே.கூ.) ஈடுபடுத்துதல் தற்போதைய அரசியலமைப்புக்கான திருத்தங்களை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளல். இறுக்கமான சரத்துகள் மீது 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துதல் இவையாவும் ஒப்பேற்றி முடியும் போது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் கணிசமானளவு பகுதி முடிந்துவிடும். அதன்பின்னர் தான் APRC இப்போது சமர்ப்பிக்கும் யோசனைகளை அவர் நடைமுறைப்படுத்தவதற்கு தலைப்படலாம்! எனவே, புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கான தீர்வு முதன்மைப்படுத்தி வேகப்படுத்தவேண்டுமென்ற எண்ணத்தைக் காணமுடியவில்லை. ஜனாதிபதி தேர்தலை அடுத்து பாராளுமன்றத் தேர்தலும் அண்மித்து விடக்கூடிய நிலையில் நிச்சயமில்லாத எதிர்காலத்திற்குள்ளேயே நாடு இட்டுச்செல்லப்படுகிறது எனலாம்.

இடம்பெயர்ந்தோர் (IDPS) மீளக்குடியமர்த்தல்

வவுனியா முகாம்களில் மக்களை அடைத்துவைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது.அவர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் எனும் வாதம் மாற்றுக்கொள்கை நிலையத்தினால் (CPA) நீதித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நிற்க அம்மக்களை தமது சொந்த வீடுவாசல்களில் மீளக்குடியமர்த்தும் விடயத்தில் அரச தரப்பில் குழப்பங்களும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. 180 நாட்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை நிறைவேற்றப்படும் என முதலில் கூறப்பட்டது. பின்பு குறிப்பிட்ட கால எல்லைக்குள் 80% மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என அரச தரப்பிலிருந்து ஐ.நா.வுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ள முரண்பாடான நிலைப்பாடுகளைப் பார்ப்போம்.

(அ) வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம சென்றவாரம் தாய்லாந்தில் “”புளும்போக்’ செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் 180 நாட்களில் 80% மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்களென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தாராயினும் 60% மக்களையே மீள்குடியேற்ற முடியும் என்றார்.

(ஆ) இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தும் வரை மீள்குடியேற்றம் செய்ய முடியாதென்கிறார்.

மீள்குடியேற்ற மற்றும் இடர் நிவாரண அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் 22.07.2009 ஆம் திகதி இடம்பெற்ற ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது குறிப்பிட்ட (180 நாள்) கால எல்லைக்கு முன்னதாகவே மீள்குடியேற்ற நடவடிக்கை முடிவடைந்துவிடும் என்று கூறினார். ஆனால், 24.07.2009 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் 180 நாள் கால எல்லை அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற போதும் நிச்சயமான காலக்கெடு பற்றிக் கூறமுடியாதென்று குறிப்பிட்டிருந்தார்.

அன்று விடுதலைப்புலிகளால் கேடயமாக்கப்பட்டு சிக்குண்டிருந்த மக்களை யுத்தமுனையிலிருந்து மனிதாபிமான முறையில் மீட்டுவிட்டதாக அரசாங்கம் கூறியது. அதே மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வவுனியா முகாம்களில் பலத்த அவலங்களுக்கு முகம்கொடுத்து வருவதும் மிகுந்த வேதனைக்குரியதாகும். அவர்களைப் பராமரித்துப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகள் , அமைச்சர்கள் முதலியோர் மேற்கொண்ட முயற்சிகள் கேள்விக் குறியானவையாகவேயுள்ளன என அறியக்கிடக்கிறது. குறிப்பாகச் சொன்னால் “மெனிக்பாம்’ எனப்படும் முகாமில் மட்டும் 50 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ஒட்டுமொத்தமான அசமந்தப்போக்குக் காரணமாக வடபகுதி மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வாய்ப்பு இழக்கப்படுவதாகவும் அவர்கள் முகாம்களில் முகம்கொடுத்த அவல வாழ்க்கை நினைவலைகளுடனேயே தமது சொந்த இடங்களுக்குத் திரும்பக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமைக்கே வழிசமைக்கப்படுவதாக பொதுவாக அதிகளவில் கவலை காணப்படுகின்றது.

மேலும் , அங்கே ஊழல்கள் தலைவிரித்தாடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வகையில் “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோம்’ என்ற போக்கில் அமைச்சர் ஒருவர் செயல்படுவதாகவும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்தல் தொடர்பாக அவர் தனது கையாட்களுக்குக் கட்டுமான ஒப்பந்த வேலைகளை வழங்குவதன் மூலம் பெரியளவில் பணம் பண்ணும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்த வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளதைக் காண முடிகிறது.

ஒரு மனிதப் பேரவலம் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய கொடிய ஊழல்கள் புரிபவர்கள் தயது தாட்சணியமின்றித் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

வ.திருநாவுக்கரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*