TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எங்களை எப்போதும் சுமக்கும் மண் எங்கள் ஈழமண்

தாயின் வயிற்றில்

பிள்ளைதனை கர்ப்பபை

சுமக்கும்

பிறந்த பிள்ளைதனை

தாயின் கைகள் சுமக்கும்

பிள்ளை நடக்கும் போது

எங்கள் மண் சுமக்கும்

இன்று எங்களை சுமந்த

எங்கள் மண் எத்தனை

கொடிய துன்பங்களை தாங்கி

கண்ணீரை அருவியாக பாய்க்கின்றது

சாதிபாகுபடுத்துபவர்களாலும்

வரதட்சினை கேட்போராலும்

வேறுபட்ட மதகொள்கைகாரர்களாலும்

பாலியல் பலாத்காரம் செய்பவர்களாலும்

கடத்தல்காரர்களாலும்

கொலைகாரர்களாலும்

களவெடுப்போராலும்

மாறுபட்ட குறிக்கோள்களுடைய

அரசியல் கட்சிகளாலும்

கொலை வெறிபிடித்த

தன்னாட்டு மக்களை அழித்து

தன்குடும்பத்திற்கு ஆட்சி

செய்யும் அரசாங்கத்தினாலும்

தான் சுமந்த தன் பிள்ளைகள்

அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு

அழிக்கப்படுவதை பார்த்து

கண்கலங்கிறது எங்கள் மண்

பல்லினசாதிகளின் சண்டைகள்

வரதட்சினையினால் கவலைப்படும்

பெற்றோர்கள்

பாலியல் வல்லுறவுக்குள்ளாகும்

பெண்களின் ஓலங்கள்

அகதி முகாம்களின் அவலங்கள்

சிறைச்சாலையின் சித்திரவதைகள்

வெள்ளைவானின் கடத்தல்கள்

அரக்கர்களின் கப்பங்கள்

விலையேற்றங்கள்

சோதனைசாவடிகள்

முட்கம்பி வேலிகள்

விமானத்தினால் மழைபோல

கொட்டப்படும் குண்டுகள்

இரசாயன ஆயுதங்கள்

வெடிக்கும் மிதிவெடிகள்

போன்ற சொல்லொணா

துயரங்களுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது

எங்கள் மண்

என்ன வளமில்லை

எங்கள் மண்ணில்

நீர் வளமுண்டு நிலவளமுண்டு

சுவாசிக்க கடலையின் தென்றல்

காற்றோடு மீன் வளமுண்டு

தென்னை வளமுண்டு பனை வளமுண்டு

எல்லா வளம்கொண்ட எங்கள் மண்ணிடம்

நிம்மதி வளமில்லை

தான் சுமக்கும் பிள்ளைகள்

எல்லோரும் ஒற்றுமையானவர்கள்

வீரம்செறிந்தவர்கள்

உயர்ந்த குறிக்கோள்களையுடையவர்கள்

ஆனால் இன்று

அப்பண்பினையுடைய பிள்ளைகள்

தன்னோடில்லையென்று கண்கலங்கி

அழுகின்றது எங்கள் மண்

எங்கள் மண் எங்களின் ஈழமண்

எங்களின் சொந்தமண்

எங்களை சுமந்த மண்

எல்லைகள் அழிக்கப்பட்டு துயரங்களை

சுமந்துநிற்க்கும் மண்

இனியும் துன்பங்களை சுமக்காமலிருக்க

எழு என்னுறவுகளே ஒன்றாக

எங்கள் மண்ணிண் துயரங்களை

உடைத்து சுதந்திர காற்றை

அது சுவாசிக்க.

– பைரவசபேஷ்
ஈழநேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Featured, Poems

Your email address will not be published. Required fields are marked *

*