TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

Makkal Moogamயாழ்.நகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரையே தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று இடதுசாரி முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சூழ்நிலையில் நடைபெறுகிறது. அரச அடக்கு முறையின் உச்ச கட்டத்தில் இத் தேர்தல்கள் நடைபெறுகிறது. அரசாங்கம் தமிழ்க் கட்சிகளைத் தனது பிடிக்குள் கொண்டு வந்து வெளியுலகத்திற்கு தமிழ் மக்கள் தமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக உள்ளனர் என்பதைக் காட்டுவதற்கு பகிரத பிரயத்தனம் செய்கிறது.

துயரத்தின் உச்ச நிலையில் இன்று தமிழ் மக்கள் உள்ளனர். இடம்பெயர்ந்து வன்னி முகாம்களில் வதைபடும் தமிழ் மக்களின் துயரநிலை கண்டு தினமும் தமது சோகங்களை மனதுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் இன்றைய நிலைமைகளை வெளிக்காட்டக் கூடிய சக்தி யார் என்பதை தமிழ் மக்கள் அடையாளப்படுத்த வேண்டும்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமது போராட்ட நடவடிக்கைகளில் சோர்வடையவில்லை என்பதை உலகம் உணர்ந்து கொள்ளும். இன்றுள்ள சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள் தொடர்பாக தினம் தினம் தனது கொள்கைகளை மாற்றி வருகிறது. இக்கட்சி பேரினவாத முகாமிற்குள் பிரவேசிப்பதற்குத் தயாராகியுள்ளது.

இவை பற்றி தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஒற்றை ஆட்சிமுறை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய நிலைப்பாடாக மாறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் கொண்டு செல்வதற்கு உரிய வேகமான செயற்பாட்டிற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் காலதாமதத்தை தவிர்த்து உடனடியாகச் செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*